வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? மருத்துவ ஆலோசனை இதோ…
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை : வலிப்பு நோய் என்றாலே பலருக்கும் ஒருவித பயம் உள்ளது. இருந்தாலும், வலிப்பு நோய் பற்றிய முழு விவரத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மூளையிலிருந்து வரும் தூண்டுதல் மூலமாகத்தான் நம் உடல் அசைவுகள் உண்டாகிறது. மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏதேனும் பாதிப்புகள் உருவாவது தான் வலிப்பு நோய் என மருத்துவர் நித்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மூளையில் உள்ள நியூரான் செல்களுக்கு இடையே எலக்ட்ரோ அலைகள் உற்பத்தி ஆகின்றது. இது உடலின் இயக்கத்திற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் உற்பத்தி சில சமயம் அதிகமாக இருக்கும்போது, உடலின் துடிப்பு அதிகமாகிவிடுகிறது. இதைத்தான் நாம் வலிப்பு நோய் என்கிறோம்.
வலிப்பு நோய் வகைகள் :
1.முழு மூளை வலிப்பு [Generalized seizures ] : வலிப்பு நோய் ஏற்பட்டதில் 40% மக்கள் இந்த வகை வலிப்பு நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த வகை வலிப்பு நோய் வாய்ப்பகுதியில் நுரையை வெளியேற்றுகிறது. மேலும், உடலில் அதிகமான அளவில் துடிப்பை ஏற்படுகிறது.
2. மூளை சிறு பகுதி வலிப்பு [Febrile seizures] : மூளையில் ஏதேனும் ஒரு பகுதி மட்டும் செயலிழப்பு ஏற்பட்டு வரக்கூடிய வலிப்பாகும். இதனால் மீதம் உள்ள 60% பேர் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.
காரணங்கள் :
தலைப்பகுதியில் ஏதேனும் அடிபட்டிருந்தாலோ, கட்டிகள் இருந்தாலோ அல்லது கிட்னி சார்ந்த பிரச்சினைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதாலோ ஏற்படும் பக்க விளைவுகளால் வலிப்பு வர வாய்ப்புள்ளது. மேலும் பரம்பரை ரீதியாகவும், அதிகமான காய்ச்சல் இருக்கும் சமயங்களிலும் வலிப்பு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
முன் அறிகுறிகள் :
வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக சில அறிகுறிகள் உடலில் தென்படும் என கூறப்படுகிறது. செரிமான தொந்தரவு, வாந்தி உணர்வு, எச்சில் அதிகமாக சுரப்பது, பயம் பதட்டம், கை கால்கள் குளிர்ந்து இருத்தல், அதிகமாக வியர்வை சுரப்பது, பார்வையில் மாறுபாடு ஏற்படுவது மற்றும் தலை சுற்றல் போன்ற அறிகுறிகள் வலிப்பு நோயை வெளிப்படுத்தும் என மருத்துவர் நித்யா கூறுகின்றார்.
இந்த வலிப்பு இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை இருக்கும் என்றும், அதற்கு மேல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். வலிப்பை மருந்துகள் கொண்டு எளிதில் குணப்படுத்தலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
முதலுதவி :
முதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து பதட்டப்படாமல் அவர்கள் அருகாமையில் நிற்க வேண்டும். இரண்டாவதாக அவர்கள் கண் கண்ணாடி அணிந்திருந்தால் அதை அகற்றி விட வேண்டும். பிறகு தலைக்கு கீழ் ஏதேனும் பெட்ஷீட் மற்றும் சாப்ட்டான துணி போன்ற தலையணை போல் வைக்க வேண்டும். இதனால் தலையில் அடிபடுவது தடுக்கப்படுகிறது.
பிறகு அவர்களை ஒரு புறமாக சாய்த்து இருக்குமாறு வைக்க வேண்டும். ஏனெனில், வாயிலிருந்து வெளியேறும் எச்சில் உள்ளே விழுங்கி விடாமல் வெளியே வருமாறு செய்ய வேண்டும். அடுத்ததாக, கழுத்தில் டை மற்றும் மேல் பட்டன் இருந்தால் அதை அகற்றி விட வேண்டும். இதனால் அவர்கள் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்கும். அதற்கு முன்பே மருத்துவ உதவிக்கு கட்டாயம் தகவல் அளித்து விட வேண்டும்.
செய்யக்கூடாதவைகள் :
வலிப்பு நோய் வந்தவர்களுக்கு கைகளில் இரும்பு மற்றும் சாவி கொடுப்பது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என மருத்துவர் கார்த்திகேயன் தனது யூட்யூப் பக்கத்தில் அறிவுறுத்துகிறார். மேலும், அவர் கூறுகையில் அவ்வாறு கொடுக்கும்போது அதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அந்த சமயத்தில் உடனே தண்ணீர் மற்றும் உணவு கொடுக்கக் கூடாது என்றும் கூறுகிறார்.
மேலும், வலிப்பு ஏற்படும் சமயத்தில் CPR செய்வது, செயற்கை சுவாசம் கொடுப்பது போன்றவற்றை செய்யக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்துகிறார். தற்போது வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகளில் அணிவதற்கு அவர்கள் தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய பேண்ட் போன்றவை உபயோகத்திற்கு வந்து விட்டதால் அதை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அதனை கொண்டு பாதிக்கப்பட்டவரின் விவரத்தை அறிந்து கொள்ளலாம் என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகின்றார்.