தீக்காயம் ஏற்பட்ட உடனே என்ன செய்ய வேண்டும் ..?என்ன செய்யக்கூடாது..?
இங்க், பேஸ்ட், மஞ்சள் தூள் போன்றவற்றை தீக்காயத்தின் மீது தடவி விட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தீக்காயத்தின் பாதிப்பை கண்டறிய மருத்துவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
சென்னை ;வீட்டில் சமைக்கும் போது எண்ணெய் அல்லது சூடான பாத்திரத்தால் எதிர்பாராத விதமாக சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படும். அந்த சமயத்தில் தீக்காயத்தின் வலியை விட பதட்டம் தான் இருக்கும். அது மட்டும் அல்லாமல் முதலில் தேடுவது ஐஸ் கட்டி மற்றும் இங்க்கயும் தேடி ஓடுவோம், ஆனால் இது தவறானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு இங்க், பேஸ்ட், மஞ்சள் தூள் போன்றவற்றை காயத்தின் மீது தடவி விட்டு மருத்துவமனைக்குச் செல்லும் போது தீக்காயத்தின் பாதிப்பை கண்டறிய மருத்துவர்களுக்கு கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இங்க் மற்றும் பேஸ்டில் ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருக்கும். அதனால் இங்க் , பேஸ்ட் ,மஞ்சள் தூள், வெண்ணை, மாவு போன்றவற்றை பயன்படுத்த கூடாது . மேலும் ஐஸ் கியூப் போன்றவற்றையும் வைக்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனென்றால் ஐஸ் க்யூப் வைப்பதால் தீக்காயம் பட்ட இடத்தில் ரத்த ஓட்டம் செல்வது தடை படுகிறது,வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது .
தீக்காயத்திற்கான முதல் உதவி;
தீக்காயத்தை நான்கு வகைகளாக பிரிக்கின்றனர் . முதல் நிலை தீக்காயம் லேசான தீக்காயம் ஆகும், அதாவது கொப்புளங்கள் இல்லாமல் இருப்பது. இரண்டாம் நிலை தீக்காயங்கள் கொப்புளங்களுடன் காணப்படுவதாகும். மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோல் பகுதி பாதித்திருப்பது மற்றும் பெரிய தீக்காயங்களாக இருக்கும் .நான்காம் நிலை தீக்காயம் தசை மற்றும் எலும்பு வரை பரவி இருக்கும்.
தீக்காயங்கள் ஏற்பட்ட உடனே முதலில் தண்ணீரைக் கொண்டு கழுவ வேண்டும். பிறகு தீக்காயம் பட்ட இடத்தில் துணி மற்றும் மோதிரங்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும். ஒருவேளை அது தீக்காயம் பட்ட இடத்துடன் ஒட்டிக் கொண்டிருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
வீட்டு வைத்தியங்கள்;
முதல் நிலை தீக்காயமான கொப்புளங்கள் அல்லாத லேசான காயங்களுக்கு மட்டுமே இந்த குறிப்புகளை பயன்படுத்த வேண்டும். தீக்காயம் பட்ட உடனே தேனை தடவி விட வேண்டும். இதனால் எரிச்சல் குறையும். பெரும்பாலும் இது டீ, காபி போன்றவற்றை சூடாக குடிக்கும் போது நாக்கில் சுட்டுவிட்டால் இந்த முறையை பயன்படுத்தினால் உடனடி தீர்வு கிடைக்கும் .மேலும் கொப்புளங்கள் வருவதும் தடுக்கப்படுகிறது.தேனைப் பொறுத்தவரை தானும் கெடாது தன்னைச் சார்ந்தவர்களையும் கெடாது என்பார்கள் அந்த அளவிற்கு தேனிற்கு மகிமை உள்ளது.
சோற்றுக்கற்றாழை;
உருளைக்கிழங்கு மற்றும் சோற்றுக்கற்றாழை ஜெல்லை நன்கு கழுவி மிக்ஸியில் அரைத்து தீக்காயம் பட்ட இடத்தில் மேல் பூச்சாக பயன்படுத்தலாம். இதனால் எரிச்சல் குறையும், வடுக்கள் வருவதும் தடுக்கப்படும். இதனை ஒவ்வொரு முறையும் புதிதாக தயாரித்து தான் பயன்படுத்த வேண்டும். தீக்காயத்தில் சூரிய ஒளி படாமல் பாதுகாப்பது மற்றும் இடையூறு தரும் ஆடைகள், அணிகலன்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும் இந்த கற்றாழை உருளை கிழங்கு பேஸ்டை முகத்தில் ஏற்படும் பிக்மென்டேஷனுக்கும் முகப்பூச்சாக பயன்படுத்தி கொள்வதால் பிக்மென்டேசன் குறையும்.
முக்கிய குறிப்பு; இந்த குறிப்புகள் கொப்புளங்கள் இல்லாத லேசான தீக்காயங்களுக்கு மட்டுமே.. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை, நான்காம் நிலை தீக்காயங்கள் ஏற்பட்டால் தண்ணீரில் கழுவி மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். அப்போதுதான் தீக்காயத்தின் தீவிரத்தை கண்டறிய முடியும்.