இன்று கறுப்பின தலைவரான நெல்சன் மண்டேலா பிறந்தநாள்!
கறுப்பின மக்களின் வாழ்க்கையில், வெற்றியின் சூரியனாய் உதித்தவர் நெல்சன் மண்டேலா. இவர் 1918-ம் ஆண்டு, தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில், ஜூலை 18-ம் நாள் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்களின் தலைவர் ஆவார்.
நெல்சன் மண்டேலா இளம் வயதிலேயே ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டு, தனது பள்ளி படிப்பை தொடர்ந்தார். இவர் போர் புரியும் கலைகளையும் பயின்றுள்ளார். இவர் சட்டக்கல்வி பயின்றுள்ளார். ஒரு தங்க சுரங்க பாதுகாப்பு அதிகாரியாகவும், தோட்ட முகவராகவும் பணியாற்றியுள்ளார். பின் இவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர், நோமதாம் சங்கர் என்ற செவிலியரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்துள்ளனர். அதன் பின் 1958-ம் ஆண்டு வின்னி மடிகி லேனா-வை மறுமணம் செய்துள்ளார்.
இவர் இனவெறி பிடித்த வெள்ளையர்கள் ஆட்சியை எதிர்த்து போராடியுள்ளார். இனவாதமும், ஒடுக்குமுறையும், அரசின் ஆதரவுடன் அரங்கேறுவதை கண்ட நெல்சன் மண்டேலா, கறுப்பின மக்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் இவர் ‘ கறுப்பின மக்களின் தலைவர்’ என அழைக்கப்படுகிறார்.
கறுப்பின மக்களின் தலைவரான நெல்சன் மண்டேலாவின் பிறந்தநாளான ஜூலை 18-ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக ஐ.நா அறிவித்துள்ளது. இவர் தனது 95-வது வயதில் டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.