தஞ்சாவூர் ஸ்பெஷல் இஞ்சி ஊறுகாய் ..நாவூறும் சுவையில் செய்முறை இதோ..!
இட்லி, தோசை ,சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைட்டிஷ் ஆன இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :இட்லி, தோசை, சப்பாத்திக்கு ஏற்ற சிறந்த சைட்டிஷ் ஆன இஞ்சி ஊறுகாய் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருள்கள்;
- இஞ்சி= ஒரு கப் [கால் கிலோ]
- நல்லெண்ணெய்= 150ml
- வெல்லம் = அரை கப்
- புளி= அரைக்கப்
- மிளகாய்த்தூள் =அரை கப்
- கடுகு= இரண்டு ஸ்பூன்
- வெந்தயம் =அரை ஸ்பூன்
- பெருங்காயம் =ஒரு ஸ்பூன்
செய்முறை;
முதலில் இஞ்சியை தோல் சீவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் வெந்தயம் மற்றும் ஒரு ஸ்பூன் கடுகை சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 100 எம் எல் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு காயவைத்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள இஞ்சியை சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கிக் கொள்ளவும். பிறகு அதனுடன் புளியையும் சுத்தம் செய்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும் .வதங்கிய பிறகு எண்ணெயிலிருந்து அதை தனியாக எடுத்து ஆறவைத்து பொடித்து வைத்துள்ள கடுகு மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும் .தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது இஞ்சி வதக்கிய எண்ணெயில் மீண்டும் 50 எம் எல் நல்லெண்ணெய் சேர்த்து காயவைத்து கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளித்து அரைக்கப் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விட்டு அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதையும் சேர்த்து கிளற வேண்டும். இவற்றை மிதமான தீயில் வைத்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும் .பிறகு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கலந்து விடவும் . இப்பொழுது வெல்லம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வந்த பிறகு இவற்றை இறக்கி ஆறவைத்து ஒரு கண்ணாடி டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த இஞ்சி ஊறுகாய் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ஈரம் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.