மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண் குணமாக சூப்பரான டிப்ஸ்கள்..!
மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம்.
மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்ணை குணப்படுத்த வீட்டில் உள்ள மஞ்சள் தூள், வேப்பிலை, பூண்டு, கருவேப்பிலை போன்ற பொருட்களை கொண்டு மருந்து தயாரித்து உபயோகிக்கலாம்.
சென்னை : மழைக்காலம் வந்தாலே சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற சிறு நோய் தொற்றுகளை போல மழை நீர் அல்லது சேற்றுகளில் வெறும் காலுடன் நடப்பதால் சேற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கின்றன. அதனை குணப்படுத்தும் சில மருத்துவ குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.
சேற்றுப்புண் என்றால் என்ன?
சேற்றுப்புண் வர காரணம் டீனியா என்ற பூஞ்சையாகும். இந்த பூஞ்சைகள் மழைக்காலத்தில் பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது .குறிப்பாக மழைக்காலத்தில் சேரான பகுதிகள் மற்றும் தண்ணீர், ஈரமான தரைகள் போன்றவற்றில் அதிகம் காணப்படுகிறது. சேற்றுப்புண் வருவதற்கு முன்பு கால் விரல்களில் இடுக்குகளில் அரிப்பு ,கொப்புளங்கள் போன்றவை இருக்கும் என டாக்டர் சகுல் ராமானுஜ முகுந்தன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
சேற்றுப் புண்ணை குணப்படுத்தும் வீட்டு குறிப்புகள்;
சுடு தண்ணீரை காய வைத்து அதில் மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் போல் செய்து இரவில் காலில் தடவி காலையில் கழுவி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரே நாளில் சேற்றுப்புண் குணமாவதை காணலாம்.
வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வருவதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுத்து சேற்றுப் புண்ணும் விரைவில் குணமாகும்.
மருதாணி இலைகளுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர வேண்டும். இந்த குறிப்பை குளிர்ச்சியான உடல் கொண்டவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டும்.
பூண்டை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து சேற்றுப்புண் உள்ள இடத்தில் பூசி வருவதன் மூலம் ஒரு வாரத்தில் சேற்றுப்புண் ஆறிவிடும். தேங்காய் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து குலைத்து காலில் தடவி வர சேற்றுப்புண் குணமாகும்.
இந்த மஞ்சள், பூண்டு ,வேப்பிலை, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றில் ஆண்டி மைக்ரோபியல் பண்புகளை கொண்டுள்ளதால் தோல்களில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றை குணப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முக்கிய குறிப்பு;
இந்த வீட்டுக் குறிப்புகளை பயன்படுத்துவதற்கு முன் மிதமான சுடு தண்ணீரில் மூன்று ஸ்பூன் உப்பு சேர்த்து அதனை கொண்டு கால்களை 15 நிமிடங்கள் கழுவ வேண்டும். பிறகு ஈரம் இல்லாமல் துடைத்து மேற்கண்ட மருத்துவ குறிப்புகளை பயன்படுத்த வேண்டும்.இதற்கு கல் உப்பையும் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
சேற்றுப்புண் வராமல் இருக்க என்ன செய்யலாம்?
கால்களை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மழை நேரங்களில் கால்களை ஈரம் படாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மழை நேரத்தில் வெளியில் செல்லும்போது அல்லது குளிப்பதற்கு முன்பு கால் இடுக்குகளில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு பிறகு குளிப்பதன் மூலம் எண்ணெய் பசைக்கு தண்ணீர் ஒட்டாமல் இருக்கும் .
அது மட்டுமல்லாமல் காலணிகளை அணியாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் சாக்ஸ் அணிவதற்கு முன்பு கால்களில் பவுடர்களை பூசி பிறகு சாக்ஸ் போடுவதன் மூலம் அது வியர்வையை உறிஞ்சி வைத்துக் கொள்ளும். தினமும் சாக்ஸை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சாக்ஸில் பூஞ்சைகள் அதிகம் தங்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் வயதானவர்கள், புற்றுநோய் சிகிச்சை மேற்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு விரைவில் இந்த பூஞ்சை தாக்கம் ஏற்படும் அதனால் சற்று பாதுகாப்பாக கால்களை பராமரிக்க வேண்டும் . சர்க்கரை நோயாளிகளுக்கு சேற்று புண் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.