இறைவன் நமக்கு தந்த முதல் முகவரி அம்மா!
அம்மா என்ற வார்த்தைக்கு அடிமையாகாத பிள்ளைகளை நாம் பார்க்க முடியாது. எத்தனையோ உறவுகள், நமது வாழ்க்கையில் வந்து போயிருக்கலாம். ஆனால், வந்த உறவுகளில் எந்த உறவுகளும் நம் வாழ்க்கையில் நிலைக்கவில்லை. ஆனால், நாம் என்னதான் வெறுத்தாலும், ஒதுக்கினாலும் நம்மை வெறுத்து ஒதுக்காத ஒரு உறவு உண்டென்றால் அது தான் அம்மா.
சுருங்கிய முகத்துடன், தள்ளாடும் வயதிலும், தன் நலத்தை கருதாது, தன் பிள்ளையின் நலனை எண்ணி கவலைப்படும் ஓர் இதயம் தான் அம்மாவின் இதயம். நமது வாயில் இருந்து வரும் பல வார்த்தைகள், நமது தாயின் உள்ளத்தை ஈட்டியால் பிளப்பது போல இருந்தாலும், அடுத்த நிமிடமே அவற்றை எல்லாம் மறந்து, அன்பை வாரி இறைப்பவள் தான் அம்மா.
இந்த உலகத்தில் எந்த உறவுகளை இழந்தாலும், அந்த பிரிவின் வலி கொஞ்ச காலம் மாத்திரமே நமது இதயத்தை வாட்டும். ஆனால், அம்மா என்ற உறவை இழந்தவர்களுக்கு தான் தெரியும், ஒவ்வொரு நொடியும் படுகிற வேதனை.
அன்று என் அழுகை சத்தம் கேட்டு சிரித்தவளே!
இன்றும் அழுகிறேன்!
சிரிப்பதற்கு நீ இல்லையென்று!
நமது வாழ்வில் ஏற்படுகிற எல்லா வெற்றிடங்களை நிரப்புவதில் அம்மாக்கு ஈடு இணை எதுவும் இல்லை. அந்த வகையில், தாயை இழந்தவர்களுக்கு தான் தெரியும், அவர்களது வாழ்க்கையில், கண்ணீர் துளிகளால் வெற்றிடங்களை நிரப்பும் வலி.
நமது வாழ்க்கையில் நமக்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷமான தாயை எந்த சூழ்நிலையிலும் தள்ளி விடாதீர்கள். நீங்கள் நேசிக்கின்ற எந்த உறவுகளால் நீங்கள் ஒதுக்கப்பட்டாலும், எந்த வகையில் உங்களை ஒதுக்காமல் உங்களுக்காக வாழ்கின்ற தாயை தலை வணங்கி போற்றுவோம்.