தம்பதியர் தங்களுக்குள் சீண்டி – கேலி,கிண்டல் செய்வதால் உறவு முறிந்துவிடுமா?
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அல்லது காதலால் திருமண உறவில் இணையும் தம்பதியர்களும் சரி, காதல் உறவில் இருக்கும் காதலர்களும் சரி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அடிக்கடி சீண்டி கிண்டல் செய்து கொள்வர். அப்படி ஜோடிகள் புரியும் சீண்டல் கேலிகள் பல மனமுதிர்ச்சி இல்லாத நபர்களின் வாழ்வில் பெரும் ஊடலை விளைவித்து அவர்களுடைய உறவையே உருக்குலைத்துள்ளது; ஆனால் ஜோடிகள் நல்ல மனமுதிர்ச்சி மற்றும் புரிதல் உடன் இருந்தால் இந்த சீண்டல்கள் அவர்களுக்கு நல்ல பலன்களைத் தருகிறது.
இந்த பதிப்பில் தம்பதியர் தங்களுக்குள் சீண்டி – கேலி,கிண்டல் செய்வதால் உறவு முறிந்துவிடுமா அல்லது உறவு நீண்டு தொடருமா என்பது பற்றி பார்க்கலாம்.
சீரியஸ் சீண்டல்கள்
ஜோடிகள் சில சமயங்களில் ஒருவரை ஒருவர் அல்லது ஒருவர் குடும்பத்தாரை மற்றவர் விளையாட்டாக கேலி பேச ஆரம்பித்து, அதை தீவிரமாகும் வரை தொடர்வர்; இவ்வாறு விளையாட்டிற்கு ஆரம்பித்த சீண்டல்களை சீரியஸ் ஆகும் வரை தொடர்ந்தால், ஜோடிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட வாய்ப்பு உள்ளது.
புரிதலுடன் கூடிய கேலிகள்
ஜோடிகளுக்குள் நல்ல புரிதல் இருந்து, அவர்கள் மனமுதிர்ச்சி மிகுந்தவர்களாக இருந்தால், அவர்களுக்குள் ஏற்படும் எந்த ஒரு கேலி – கிண்டலும் பிரிவினையைக் கொணராது. அப்படியே கிண்டல் எல்லை மீறினாலும், புரிதல் உள்ள ஜோடியர் நிலையின் போக்கை உணர்ந்து அதை மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்வர்.
ஆய்வு முடிவுகள்
சமீபத்தில் 150,000 ஜோடிகளிடையே நடத்தப்பட்ட ஆய்வினில் தம்பதியர் கேலி – கிண்டல்களுடன் தங்கள் வாழ்வை மேற்கொள்ளும் பொழுது அவர்களால், அதிக மகிழ்ச்சியையும், நெருக்கத்தையும் பெற முடிவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணர்கள் அனைத்து தம்பதியரையும் நண்பர்களைப் போல் கேலி – கிண்டல் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உறவு இனிக்கும்!
தம்பதியர் தங்களது நெருக்கமான நிலை மற்றும் உடலுறவு விஷயங்கள் குறித்தும் கேலி – கிண்டல்கள் செய்து கொள்வது அவர்கள் நெருக்கத்தை மேலும் நெருக்கமாக்கும் என்றும் ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் தம்பதியர்களே! உங்கள் மண வாழ்வை அல்லது காதல் உறவை மனதை புண்படுத்தாத கேலி கிண்டல்களுடன் மகிழ்ச்சியாக – நெருக்கமாக வாழுங்கள்! வாழ்க வளமுடன்..!