கெட்ட எண்ணங்களை ஒழித்து, நல்லெண்ணங்களை விதைப்போம்!
கெட்ட எண்ணங்களை அழித்து, நல்ல எண்ணங்கள் வளர்ப்போம்.
இன்று நல்லெண்ணம் உள்ள மனிதர்களை பார்ப்பதே கடினமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் நான் நன்றாக இருக்க வேண்டும். நான் சுகித்திருந்தால் போதும் என்ற சுயநலத்துடன் தான் வாழ்க்கையை நகர்த்தி கொண்டிருக்கிறான்.
இறக்க தானே பிறந்தோம். அதுவரை இரக்கத்தோடு வாழ்வோம்.’ என்ற அன்னை தெரசாவின் வார்த்தைக்கேற்ப நமது வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
உலகில் வந்த எந்த மனிதனும், எதையும் கொண்டுவரவும் இல்லை. மீண்டும் கொண்டு செல்வதுமில்லை. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும், வெறுங்கையாய் வந்து, வெறுங்கையோடு தான் திரும்புகிறான்.
நமது வாழ்க்கையில் நாம் சேர்த்து வைத்த புகழ், பதவி, பணம் என எல்லாம் நாம் உயிரோடு இருக்கும் வரை தான். இந்த உயிர் நம்மை விட்டு பிரிந்த பின் நாம் ‘பிணம்’ என்ற பெயரை மட்டுமே சம்பாதித்து கொள்கிறோம். அதற்கிடையில், நாம் நல்லவனாக வாழ்ந்து, பிறருக்கு உதவி செய்து, பிறர் மனதை காயப்படுத்தாமல் வாழ்வோமானால், நாம் இறக்கும் போது, அவன் நல்லவன். இறந்துவிட்டானே என்று பேசுவார்கள்.
எனவே இந்த உலகில் வாழும் வாழ்க்கையில், நமது மனதை கெட்ட எண்ணம், சுயநலம் என்ற குப்பைகளால் நிரப்பாமல், காலியான மனதுடன், அந்த மனம் முழுவதும் கடவுள் தன்மை நிறைந்ததாய் காணப்படும்படி வாழ்வோம். நல்லதையே விதைப்போம். நல்லதையே அறுப்போம்.