இந்த 5 ‘பணம்’ விஷயம் தெரிஞ்சா உங்க வாழ்க்கை மொத்தமாக மாறிவிடும்.!
Financial Habits : உங்கள் வாழ்வில் முன்னேற இந்த 5 வழிமுறைகளை கடைபிடியுங்கள்.
நாம் வாழ வேண்டும், நாலு பேர் மதிக்கும்படியாக வாழ வேண்டும், மற்றவர்கள் நம்மை பார்த்து, நல்ல வேலையில் இருக்கிறான். வீடு வைத்துள்ளான். கார் வைத்துள்ளான் என பேசும்படியான வாழ்க்கை வாழ வேண்டும் என பலருக்கும் பொதுவான எண்ணங்கள் உண்டு. அதனை விரைவாக அடைய, நல்ல வேலை அமைந்த உடன் அடுத்த 25 ஆண்டுகளுக்கு கடன் பெற்று வீடு வாங்குவது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு கடன் பெற்று கார் வாங்குவது என்று நடைமுறை வாழ்க்கையை கடனில் வாழ ஆரம்பித்து விடுவார்கள். அதன் பிறகு அந்த கடனை அடைக்க முன்பை விட அதிகமாக ஓட வேண்டிய சூழல் ஏற்படும். இளம் வயதை கடந்த பின்னர் நாம் ஏன் தவறான பாதையை தேர்ந்தெடுத்தோம் என வருந்துவார்கள்.
இப்படியான சமூக கட்டமைப்பிலிருந்து மீள்வதற்கு எளிதாக ஒரு ஐந்து வழியை பொருளாதார நிபுணர் ஒருவர் எழுதிய புத்தகத்தின் படி இதில் காணலாம்.
பாதுகாப்பான முதலீடு :
அதிக லாபம் தரும் முதலீடுகளை தவிர்த்து நீண்டகால முதலீடு, SIP போன்றவற்றில் பாதுகாப்பாக முதலீடு செய்ய வேண்டும். மேலும், நீங்கள் தான் உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்றால், கண்டிப்பாக உன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இன்சூரன்ஸ் போட்டு வைக்க வேண்டும். அது நீங்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும். மேலும், உங்கள் குடும்பத்தின் எதிர்பாரா மருத்துவ செலவுகளையும் இதன் மூலம் நீங்கள் கவனித்துக் கொள்ளலாம்.
தவறான முதலீடு :
உங்களுக்கு மாதம் கணிசமான வருமானம் வருகிறது. அதன் மூலம் குறிப்பிட்ட தொகையை நீங்கள் சேமித்து வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உடனே சில சமூக வலைதள வீடியோக்கள் அல்லது தவறான நண்பர்களின் ஆலோசனை மூலம் தினசரி டிரேடிங் (Indradai trading) போன்ற அதிகபட்ச ரிஸ்க் இருக்கும் முதலீடு ஆகியவற்றில் அனுபவமின்றி முதலீடு செய்து உங்கள் சேமிப்பையும், உழைப்பையும் வீணடிக்க கூடாது. நல்ல அனுபவம் பெற்று அல்லது அனுபவம் வாய்ந்தவர்களின் அறிவுரையை கேட்டு குறைந்த அளவு ரிஸ்க் இருக்கும் முதலீடுகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிதானமான செலவீனங்கள் :
எப்போதுமே ஒரு பொருளை வாங்கபோகிறீர்கள் என்றால் இன்னொரு பொருளை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். ஒரு வாய்ப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தால், இன்னொரு வாய்ப்பை நீங்கள் நிராகரிக்க வேண்டும். இதனை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். தற்போது நீங்கள் ஒரு பொருள் வாங்குவதற்கு ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் இன்று தான் ஆஃபர் தேதியின் கடைசி நாள். என்ற விளம்பரங்கள் உங்கள் முன் வந்து போகும்.
நீங்கள் சிந்திக்காமல் அதனை வாங்கி விடுவீர்கள். அதனை செய்யாமல் குறைந்தது ஒரு நாள் அதனை தள்ளி போட வேண்டும். அந்த ஒரு நாளில் உங்களுக்கு அந்த பொருள் தேவைதானா என்பதை ஆலோசிக்க வேண்டும். கண்டிப்பாக தேவை இருப்பின் மட்டுமே அந்த பொருளை வாங்க வேண்டும். அதுவும் அதிக நாட்கள் கடன் இருக்கும்படி இருக்கவே கூடாது.
சேமிப்பு – கடன் வித்தியாசம் :
அடுத்து சேமிப்பு கடன் ஆகியவற்றை ஒப்பிட தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது, நாம் மாதம்தோறும் 5000 ரூபாய் சேமிப்பு அல்லது முதலீடு செய்து வைத்து இருப்பதாக வைத்து கொள்வோம். அதே நேரத்தில் வீடு, மற்ற சில பொருட்களை கடன்பெற்று வாங்கி உள்ளோம் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு மாத வட்டி மட்டும் 6000 முதல் 7000 ஆகியவை செலவாகிறது என்றால், இது காலம் செல்ல செல்ல உங்களுக்கு ஆபத்தாக முடியும். உங்கள் கடன்தான் பெருகும். அதனைத் தவிர்த்து உங்கள் கடனை விரைவில் அடக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கடன் முழுவதுமாக அடைந்த பின்னர் சேமிப்பை முழுவீச்சில் தொடங்குங்கள். உங்கள் சேமிப்பு, உங்கள் கடன் வட்டியை விட அதிகரிக்காத படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூத்தவர்கள் தவறு :
பொதுவாகவே இந்த கூற்றை நாம் கேட்டிருப்போம். அதாவது எனது தாத்தா அவர் காலத்தில் இந்த இடம் வெறும் 500 ரூபாய் தான் இருந்தது. ஆனால், அப்போது வாங்காமல் விட்டுவிட்டேன் என கூறியிருப்பர். உங்களது அப்பா, இந்த இடம் வெறும் ஒரு லட்சம் ரூபாய் தான் இருந்தது. ஆனால் அப்போது வாங்காமல் இருந்துவிட்டேன். இப்போது அதன் விலை கோடி கணக்கில் இருக்கிறது என புலம்புவதை நாம் கேட்டிருப்போம். அந்தத் தவறை எக்காரணம் கொண்டும் நாம் செய்து விடக்கூடாது. அவ்வாறு, நல்ல வாய்ப்பு உங்களுக்கு அமைகிறது என்றால் உடனடியாக உங்கள் சக்திக்கு தகுந்தார் போல் கடன்களை வாங்கி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இப்படியான இந்த குறைந்தபட்ச ஐந்து பொருளாதார வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே நிச்சயமாக ஒரு சில ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கை மாறுவதை நீங்கள் பார்க்க முடியும்.