எண்ணெய் தேய்த்து குளிப்பவர்களா நீங்கள்.? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!
எண்ணற்ற உடல் ஆரோக்கியத்தை தரும் எண்ணெய் குளியலை செய்தால் ஏற்படும் நன்மைகள் மற்றும் எப்போது குளிப்பது, எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு என்னெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நாம் பொதுவாக வாரம் ஒரு முறை எண்ணெய் குளிக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலைகளில் அது குறைந்து, எப்போதாவது தான் என்ற நிலை வந்துள்ளது. ஆனால் அவ்வாறு செய்யாமல் கண்டிப்பாக வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறையாவது எண்ணெய் குளியலை நாம் பின்பற்ற வேண்டும்.
எண்ணெய் குளியலுக்கு உகந்த எண்ணெய் நல்லெண்ணெய். இதை நாம் காலை சூரிய உதயத்திற்கு பின் இளம் வெயிலாக இருக்கும்போது தேய்த்து அரை மணி நேரம் கழித்து சுடு தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்க்கவும். இவ்வாறு நாம் வாரம் ஒரு முறை செய்து வந்தால் உடலில் வெப்பம் தனியும்.
வைட்டமின்-டி மற்றும் கால்சியம் நம் உடலுக்கு கிடைக்கும். இது நமது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் கண்ணிற்கு குளிர்ச்சி தரும். கண் சூடு, கண் எரிதல் போன்றவற்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். தலைமுடியின் வேர் கால்களுக்கு நல்ல ஊட்டம் அளிக்கும்.
செய்யக்கூடாதவைகள்
- எண்ணெய் தேய்த்து குளித்த நாளில் குளிர்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அதாவது இளநீர், மோர், தயிர் ,ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான உணவுகளை அன்று உண்ணக்கூடாது.
- எண்ணெய் குளியல் எடுத்த பிறகு நல்ல தூக்கம் வரும். ஆனால் அன்று பகலில் நாம் தூங்கக் கூடாது ஏனென்றால் உடலில் உள்ள வெப்பம் முழுவதும் கண் வழியாகத்தான் வெளியேறும். நாம் தூங்கிவிட்டால் அந்த வெப்பம் முழுவதும் நம் உடலுக்குள்ளே தங்கிவிடும்.
- அமாவாசை, பௌர்ணமி, பிறந்தநாள் போன்ற போன்ற நாட்களிலும் ஞாயிறு திங்கள் போன்ற கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இவை குளிர்ச்சியான நாட்களாகும். குளிர்ச்சியான நாட்களில் நாம் எண்ணெய் தேய்த்து மீண்டும் குளிர்ச்சியை கூட்டினால் அது நம் உடலுக்கு பல பக்க விளைவுகளை உண்டு பண்ணும்.
- குளிர்ந்த உடல் உள்ளவர்கள் எண்ணெய் தேய்க்கும் முன் பாதத்திலிருந்து தொடங்கி உச்சிக்கு வர வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.
- வெப்ப உடல் உள்ளவர்கள் முதலில் உச்சியில் தொடங்கி பிறகு பாதம் வரை தேய்க்க வேண்டும். இவ்வாறு குளித்தால் சளி பிடிக்காமல் இருக்கும்.
குறிப்பு
எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாட்களில் ஷாம்பூ மற்றும் சோப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். கடலை மாவு மற்றும் சீயக்காயை பயன்படுத்த வேண்டும்.