வெற்றி தரும் வாகையின் மருத்துவ குணங்கள் தெரிஞ்சா அசந்து போவீங்க..!

vaagai flower (1)

சென்னை -வாகை மரத்தின் பயன்கள் மற்றும் அதன் பாகங்கள் எந்தெந்த நோய்க்கு மருந்தாகிறது என்ற சுவாரசியமான தகவல்களை இந்த செய்தி குறிப்பின் மூலம் அறியலாம்.

வாகை மரதின் சிறப்புகள் ;

வாகை மரம் பழங்காலத்திலிருந்து நம் வாழ்க்கையில் ஒன்றிய மரமாக விளங்குகிறது. தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள முக்கிய மரமாக கூறப்படுகிறது. வாகை மரமானது காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி தூய்மையான காற்றை தருகிறது. மண் அரிப்பை தடுக்கிறது. இந்த மரம் செம்மண், சரளை  கலந்த செம்மண், மணல் ,கரிசல் மண், நீர்ப்பாசன பகுதிகள் போன்ற இடங்களில் வளரக்கூடிய மரமாகும்.

மேலும் இது வறட்சியைத் தாங்கி வெப்பமான பகுதிகளிலும் வளரக்கூடிய மரம் என்றும் கூறப்படுகிறது. வாகையில்  சிறுவகை ,பெருவாகை, நிலவாகை, காட்டு வாகை, செவ்வாகை, கருவாகை, தூங்குவாகை  என பல வகைகள் உள்ளது. வாகை மரத்தின் பட்டை, இலை ,பிசின், பூ என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

இதன் மரத்தைக் கொண்டு கதவு ,ஜன்னல் ,பருப்பு கடையும் மத்து ,தானிய பெட்டி, உலக்கை போன்ற மர சாமான்கள் தயாரிக்க பயன்படுகிறது. மர செக்கு உலையில்  ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்தாலும்  விதைகளை ஆட்டி சூடேற எண்ணெய்களை பிரித்தெடுக்கும் சக்தி இந்த வாகை மரத்திற்கு உண்டு என்பதால் செக்குகளில் வாகை மரத்தின் செக்குகள் முதல் தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் விதைகளிலிருந்து  எடுக்கப்படும் எண்ணையின் சத்துக்களும் மருத்துவ குணங்களும்  குறையாமல் கிடைக்கவும்  உதவுகிறது .

குணமாகும் நோய்கள்;

சர்க்கரை நோய், வயிற்று வலி ,பாக்டீரியா தொற்றுகள் ,பூஞ்சை தொற்று ,பாம்பு விஷக்கடி, தோல் நோய், வெள்ளைப்படுதல், மூட்டு வலி ,குஷ்டம், தொழுநோய்,  வீக்கம் ,கண் அரிப்பு ,கண் நீர் வடிதல், மூக்கடைப்பு, பசியின்மை ,வாத நோய், மூல நோய் என பல நோய்களுக்கு வாகை மரத்தின் பாகங்கள் உதவுகிறது.

மருத்துவ பயன்கள்;

சித்த மருத்துவத்தில் சிறுபஞ்சமூலம், பெருபஞ்சமூலம் என்ற இருவகை மருத்துவத் தொகுப்பு உள்ளது .அதில் பெருபஞ்சமூலத்தின் மூலிகையில் வாகையும் ஒன்றாக திகழ்கிறது.

  • வாகை மரத்தின் இலைகளை சுத்தமான அம்மியில்  அரைத்து கண் இமைகளில் வைத்து கட்டினால் கண் சிவப்பு மற்றும் கண் எரிச்சல் குணமாகும்.
  • வாகை மரப்பட்டையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவும். பிறகு தேவைப்படும் போது ஒரு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர பசியை தூண்டும் மேலும் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
  • ஒரு கிராம் வாகை மரப் பொடியை வெண்ணையில் கலந்து எடுத்துக் கொண்டால் உள்மூலம், ரத்தம் மூலம் ,வெளி மூலம் குணமாகும். ஒரு கிராம் வாகை மரப்பொடியை மோரில் கலந்து குடித்தால் பெரும் கழிச்சல் நோய் குணமாகும். மேலும் இந்த பொடியை அடிபட்ட காயங்களில் வைத்து கட்டினால் புண்கள் விரைவில் ஆறும்.
  • மூக்கடைப்பு குணமாக இதன் கொழுந்துகளை நசுக்கி மூக்கில் நுகர்ந்தால்  மூக்கடைப்பு நீங்கும்.
  • மூட்டு வலி மற்றும் வீக்கம் குணமாக இதன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் வைத்து கட்டினால் வலி குறையும் .மேலும் யானைக்கால் நோய், விரை வீக்கம் போன்றவற்றிற்கும் இந்த முறையை பயன்படுத்தலாம்.
  • வாகை பூக்களை 30 எடுத்து 20 மிளகு சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து அது அரை லிட்டராக வந்த பிறகு தேன் கலந்து குடித்து வந்தால் விஷ கடியால் ஏற்படும் தொந்தரவு ,கை கால் குடைச்சல் குத்தல் சரியாகும்.
  • வாகை மரத்தின் விதைகள் மற்றும் பூ மொட்டுக்களை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி கை கால் வலி மற்றும் தொழுநோய்களுக்கு மருந்தாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • வாகை  பூக்களை கசாயம் செய்து தேன் கலந்து குடித்து வந்தால் நுரையீரல் அலர்ஜி ,ஆஸ்துமா வயிற்றுப்போக்கு குணமாகும்.
  • வாகை மரத்தின் விதையிலிருந்து கிடைக்கும் எண்ணெய்  குஷ்ட நோய்க்கும் ,தொழு நோய்க்கும் மருந்தாகிறது  என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாகை மரத்தின் பூ நறுமண தைலம் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே வாகை மரத்தின் பூ முதல் அனைத்து பாகங்களுக்குமே மருத்துவ குணங்கள் நிறைந்தது. வாகை வெற்றி சுடுவதற்கு மட்டுமல்லாமல் மனித குலத்தின் பல நோய்களுக்கும் மருந்தாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்