வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி? அதன் மருத்துவ நன்மைகள் இதோ..
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம்.
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரகம் – ஒரு ஸ்பூன்,
தனியா – மூணு ஸ்பூன்,
சோம்பு – ஒரு ஸ்பூன்,
பட்டை – 3 ஸ்பூன்,
லவங்கம் – இரண்டு ஸ்பூன்,
ஏலக்காய் – ஒரு ஸ்பூன்,
மிளகு – ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை – மூன்று,
அண்ணாச்சி பூ – மூன்று,
கல்பாசி – 1,
ஜாதிபத்திரி – 2
ஆகியவற்றை மேற்குறிப்பிட்டவாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
செய்முறை :
சீரகம் ,சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, பிரியாணி இலை, அண்ணாச்சி பூ, கல்பாசி, ஜாதிப்பத்திரி ஆகியவற்றை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு கொத்தமல்லி விதைகளை தனியாக வறுத்து கொள்ள வேண்டும். இப்போது இவற்றை நன்கு ஆறவைத்து மிக்ஸியில் பவுடர் ஆக்கிக் கொள்ள வேண்டும். மீண்டும் இதை ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து விட வேண்டும். தேவைப்படும்போது உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த கரம் மசாலா தயாரிப்பு ஒவ்வொரு பகுதிகளிலும் செய்முறை மாறுபடலாம்.
கரம் மசாலாவின் நன்மைகள்:
கரம் மசாலாவில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடென்ட் (Antioxidant) உள்ளது. இது அலர்ஜி, வீக்கம், வலிகள் வராமல் தடுக்கிறது .மேலும் காய்ச்சல் சளி இருக்கும் சமயத்தில் கரம் மசாலாவை கொண்டு டீ தயாரித்தும் குடிப்பது நல்ல பலனை தரும்.
பல மசாலா பொருட்கள் சேர்த்து தயாரித்து உள்ளதால் உடலில் ஒரு வெப்பத்தை உருவாக்கும். இது நல்ல ஜீரண சக்தியை கொடுத்து மலச்சிக்கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் நாம் சேர்த்துள்ள ஏலக்காய் மற்றும் கொத்தமல்லி விதைகள் இதய கோளாறுகள் ஏற்படுவதை தடுப்பதோடு, கொழுப்புகள் படிவதையும் தடுக்கிறது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்கிறது. பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதையும் இது தடுக்கிறது என்று டாக்டர் கார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.
மேலும் உடலில் தேங்கியுள்ள நச்சுக்களையும் இந்த மசாலா வெளியேற்றுகிறது. முகச்சுருக்கம் ,கருவளையம் போன்ற பல தோல் பிரச்சனைகள் ஏற்படுவதையும் இந்த மசாலா தடுக்கிறது. இது வெப்பமான உணவு பொருள் என்பதால் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்கிறது.
குறிப்பாக எடை குறைப்பு முயற்சியில் ஈடுபடுபவர்கள் இந்த கரம் மசாலாவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். கிராம்பில் உள்ள யூசினால் சத்து கொழுப்பை கரைக்க உதவுகிறது. மேலும், நம் உடலில் பல விட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்சுவதற்கும் கரம் மசாலா உதவி செய்கிறது.
புற்றுநோய் செல்கள் ஏற்படுவதை தடுக்கிறது .குறிப்பாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது இதன் மூலம் குறைக்கப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலியும் இந்த மசாலா குறைகிறது .அதனால் அன்றாட உணவில் கரம் மசாலா சேர்த்துக்கொள்வது நல்லது எனவும் டாக்டர் கார்த்திகேயன் கூறுகின்றார்.
பக்க விளைவுகள் :
கரம் மசாலாவில் உள்ள காரத்தன்மை சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. அதனால் தோல் அரிப்பு, வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல், வயிறு உப்பசம் போன்ற கோளாறுகளையும் இது ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.