நோன்பு கஞ்சி வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி?
வீட்டிலேயே எளிமையாக நோன்பு கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ரமலான் மாதம் வந்தாலே தினமும் நோன்பு கஞ்சி மாலை நேரத்தில் மசூதிகளில் தருவார்கள். இந்த நோன்பு கஞ்சியை பலரும் விருப்பமாக குடிப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்க கூடிய இந்த நோன்பு கஞ்சியை வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். அதை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்: பச்சரிசி/சீரக சம்பா அரிசி – அரை கப், பாசிப்பருப்பு – 1/8 கப், வெங்காயம் – ஒன்று (நறுக்கியது), தக்காளி – ஒன்று (நறுக்கியது), கேரட் – கால் கப் (நறுக்கியது), புதினா – கால் கப், இஞ்சி பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன் (நறுக்கியது), தண்ணீர் – மூன்று கப், கெட்டியான தேங்காய் பால் – அரை கப், நீர்ப்போன்ற தேங்காய் பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு.
மசாலா பொடி: மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், மிளகாய் தூள் – அரை டீஸ்பூன், கரம் மசாலா – கால் டீஸ்பூன்
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்: எண்ணெய் – இரண்டு டீஸ்பூன், பட்டை – ஒன்று இன்ச், கிராம்பு – இரண்டு, ஏலக்காய் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்ற.
செய்முறை: முதலில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக நீரில் கழுவி விட்டு தண்ணீரை வடித்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு குக்கரை வைக்க வேண்டும். அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் தாளிக்க தேவையான பொருட்களை போட்டு நன்கு தாளிக்க வேண்டும். பின்னர் இதில் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்க வேண்டும். இது நன்கு 1 நிமிடம் வரை வதங்கிய பிறகு, இதில் வெங்காயம் போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் தக்காளி சேர்க்க வேண்டும். இது மென்மையாகும் வரை வதக்கினால் போதும். பின்னர் இதனுடன் கேரட், புதினா, மசாலா பொருட்கள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். இவை அனைத்தும் பச்சை வாசனை போகும்வரை வதக்க வேண்டும். வதங்கிய பிறகு இதில் அரைத்து வைத்துள்ள அரிசி, பருப்பை சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அதனுடன் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து குக்கரை மூடி விடுங்கள்.
4 முதல் 5 விசில் வந்த பிறகு விசில் அடங்கிய பின்னர் குக்கரை திறந்து வெந்து இருக்கும் சாதம், பருப்பு, காய்கறிகள் இவற்றை கரண்டியால் மசித்து விடுங்கள். இந்த கலவை மிகவும் கெட்டியாக இருந்தால் இதனுடன் சிறிது நீர் சேர்த்து கொள்ளலாம். பின்னர் இதில் கெட்டியாக உள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்க வேண்டியது தான். அவ்வளவு தான் சூடான சுவையான நோன்பு காஞ்சி வீட்டிலேயே எளிமையாக செய்து விடலாம்.