ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!
முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- சீயக்காய்- 50 கிராம்
- காய்ந்த நெல்லிக்காய்- 50 கிராம்
- பூந்திக்கொட்டை- 50 கிராம்
- வெந்தயம் -ஒரு ஸ்பூன்
- காய்ந்த செம்பருத்தி பூ மற்றும் இலைகள் -50 கிராம்
- கருவேப்பிலை- ஒரு கைப்பிடி
- வேப்பிலை- ஒரு கைப்பிடி
- சுத்தமான தண்ணீர்- இரண்டு லிட்டர்.
செய்முறை;
மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரை ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். இதை அப்படியே இரவு முழுவதும் ஊற வைத்துவிட்டு காலையில் 30 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு இவற்றை ஆற வைத்து அதில் உள்ள பூந்தி கொட்டைகளை நீக்கி மற்றவற்றையெல்லாம் கைகளால் பிசைந்து விடவும். நன்கு நுரை வந்த பிறகு அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்து விட வேண்டும் . இதில் எந்த ஒரு ரசாயனமும் நாம் சேர்க்கவில்லை என்பதால் கட்டாயம் ஃப்ரிட்ஜில் தான் வைக்க வேண்டும்.
இதில் சேர்க்கப்படும் சீயக்காய் முடியை நன்கு சுத்தம் செய்கிறது. நெல்லிக்காய் ஆனது முடி கருமையாகவும் ஆரோக்கியமாகவும் வளர உதவுகிறது. பூந்திக்கொட்டை சிறந்த கண்டிஷனரை போல செயல்படுகிறது, நன்கு நுரையும் வர செய்கிறது. வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, பொடுகு வராமலும் பாதுகாக்கிறது.
செம்பருத்தி பூ மற்றும் இலை முடியை வலுவாக்க உதவுகிறது. கருவேப்பில்லை இளம் நரை வராமல் பாதுகாத்து முடி உதிர்வை குறைக்கிறது. வேப்பிலை ஆனது தலையில் அரிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.மேலும் ரசாயனம் கலக்காத எண்ணெய் பயன்படுத்தி ,ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுவதன் மூலம் முடி உதிர்வை தடுக்கலாம் .குறிப்பாக மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும் .