முருங்கை கீரையில் சுவையான ரசம் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்..!
நம்மில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் காணப்படக்கூடிய ஒரு மரம் தான் முருங்கை மரம். முருங்கை மரத்தில் எதுவுமே தேவையில்லை என்று சொல்ல முடியாது. முருங்கை மரத்திலுள்ள இலை, பூ, தண்டு, வேர், காய் என அனைத்துமே பயன்படுத்தக்கூடியவை தான்.
முருங்கை கீரையை பொறுத்தவரையில், அதில் முருங்கை கீரை பொரியல், முருங்கை கீரை கூட்டு, முருங்கை கீரை சூப், முருங்கை கீரை சாதம், முருங்கை கீரை ஜூஸ் என செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில் முருங்கைக்கீரை ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முருங்கை கீரை – 1 கட்டு (250 கிராம்)
- தக்காளி – 2, நறுக்கியது
- வெங்காயம் – 1, நறுக்கியது
- இஞ்சி-பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
- மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – சிறிது
- கொத்தமல்லி – சிறிது, பொடியாக நறுக்கியது
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முருங்கைக் கீரையை நன்றாக கழுவி, அதனை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிய விட்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.
அதன்பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பின் முருங்கை கீரையை அதோடு சேர்த்து நன்கு கிளறி மிதமான தீயில் வேக வைத்து முருங்கைக்கீரை வெந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான முருங்கை ரசம் தயார்.
இந்த ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். மேலும், இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.