குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்கும் சுவையில் அவல் வடை செய்வது எப்படி?
ஆரோக்கியமான அவல் வடை செய்து குழந்தைகளை அசத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
அவல் மிகவும் ஆரோக்கியமான ஒன்று. இதனை எளிமையாக குழந்தைகளுக்கு கொடுக்க அவல் வடை ரெசிபி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். வடை என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிட தொடங்குவர். அதிலும் அவல் வடையில் மொறுமொறுப்பாக சுவையாக இருக்கும் என்பதால் இதை சாப்பிட்ட குழந்தைகள் மீண்டும் இதே போன்றே வடை கேட்பார்கள். அந்த அளவு சுவையுள்ள வடை ரெசிபிக்கு தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: வெள்ளை அவல் – 1 கப், பெரிய வெங்காயம் – மூன்று, பச்சை மிளகாய் – 3, இஞ்சி சிறிய துண்டு – 1, ரவை – இரண்டு ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு ஸ்பூன், உப்பு – 1 ஸ்பூன், பெருங்காயத்தூள் – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லித்தழை – 1 கொத்து, எண்ணெய் – 1/4 லிட்டர்.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் அவலை எடுத்து கொண்டு இரண்டு முறை தண்ணீர் ஊற்றி நன்கு அலசி கொள்ளுங்கள். பின்பு மூன்றாவது முறை தண்ணீர் ஊற்றி அதில் அவலை ஊற வைத்து கொள்ளுங்கள். இந்த அவல் ஐந்து நிமிடம் வரை ஊற வேண்டும். ஊறும் நேரத்தில் வடைக்கு தேவையான மற்ற பொருட்களை தயார் செய்து கொள்ளலாம். முதலில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
இப்போது ஒரு பாத்திரத்தில் ஊறிய இருக்க கூடிய அவலை தண்ணீர் இல்லாமல் சேர்த்து அதில் ரவை, அரிசி மாவு, உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றுடன் ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வடை பதத்திற்கு மாவு தயார் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி கொள்ளலாம்.
பின்னர், அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்தவுடன் தயார் செய்து உள்ள வடை மாவை எடுத்து வடை போல தட்டி எண்ணெயில் சேர்க்க வேண்டும். இருபக்கமும் நன்கு பொன்னிறமாக வந்த பிறகு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் சூடான, சுவையான அவல் வடை ரெடி. இதனை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து தர கூறுவார்கள். ஆரோக்கியம் தரும் அவல் வடையை செய்து பார்த்து உண்டு மகிழுங்கள்.