வாயில் வைத்தவுடன் கரைய கூடிய அசத்தலான லட்டு செய்வது எப்படி..?
நமது வீடுகளில் பண்டிகைகளின் போது பெரும்பாலவர்களின் வீட்டில், பலகாரம் செய்வது வழக்கம். அந்த பலகாரங்களில் நமது வீடுகளில் அனைவருமே விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பலகாரம் என்றால் அது லட்டு தான். தற்போது இந்த பதிவில் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சம்பா கோதுமை ரவை – 1 கப்
- சீனி – 1 கப்
- ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – சிறிதளவு
- ஃபுட் கலர் – 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் லட்டு செய்ய தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதனுள் சம்பா கோதுமை ரவையை இரண்டையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மற்றொரு கடாயில் தண்ணீர் மூன்று கப் ஊற்றி அதனுள் வறுத்து வைத்துள்ள சம்பா கோதுமை ரவையை போட்டு நன்கு வேக விட வேண்டும். அந்த ரவை நன்கு வெந்து கெட்டியான பதத்திற்கு வரும் வரை கிளறி விட வேண்டும்.
அதன் பின்பு ஒரு கப் சீனி, ஏலக்காய் தூள், சிறிதளவு உப்பு, ஃபுட் கலர் இவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். சீனி வேண்டாம் என நினைப்பவர்கள், வெள்ளம், நாட்டு சர்க்கரை போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம். கிளறிய பின்பு மேலும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கிளறி இறக்கி வைக்க வேண்டும்.
இந்த கலவை நாம் உருண்டை பிடிப்பதற்கு ஏற்ற வண்ணம் சூடுஆறிய பின்பு நமக்கு தேவையான முந்திரி, பாதாம் அல்லது நமக்கு பிடித்த வேறு பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். முந்திரி, பாதாம் போன்றவற்றை கலந்த பின் உருண்டையாக பிடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது சுவையான லட்டு தயார்.
லட்டு என்றாலே நமது வீடுகளில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். நாம் கடைகளில் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக வீட்டிலேயே இவ்வாறு எளிய முறையில் செய்து சாப்பிடுவது மிகவும் நல்லது.