ஒரு வருடம் ஆனாலும் கெடாமல் இருக்க சாம்பார் பொடி செய்முறை இதோ..!
சென்னை -கொங்கு ஸ்டைலில் சாம்பார் பொடி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்;
- துவரம் பருப்பு= 200 கிராம்
- கடலை பருப்பு= 200 கிராம்
- உளுந்தம் பருப்பு= 150 கிராம்
- சீரகம்= 200 கிராம்
- வெந்தயம்= 100 கிராம்
- கடுகு= 100 கிராம்
- மிளகு= 100 கிராம்
- அரிசி= 100 கிராம்
- கருவேப்பிலை= 200 கிராம்
- மஞ்சள்= 100 கிராம் விரலி
- உப்பு= சிறிதளவு
- விளக்கெண்ணெய்= அரை லிட்டர்
- மல்லி =முக்கால் கிலோ
- மிளகாய் =1 கிலோ
செய்முறை;
மசாலா அரைக்க கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பொருட்களையும் தனித்தனியாக பொன்னிறமாக மணம் வர மிதமான தீயில் வறுத்து கொள்ளவும். கருகிவிடாமல் பார்த்துக் கொள்ளவும். ஏதேனும் ஒரு பொருள் கருகிவிட்டாலும் குழம்பு கசப்பு சுவையை கொடுக்கும். பிறகு மிளகாயை வறுக்கும் போது மட்டும் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து பிறகு மிளகாயை கருகிவிடாமல் வறுத்து கொள்ளவும்.அதேபோல் கருவேப்பிலையை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து மொறு மொறுவென காய வைத்துக் கொள்ளவும். இப்போது இவற்றை ஆற வைத்து மிஷினில் கொடுத்த அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு அரைத்த சாம்பார் பொடியை நன்கு ஆறவைத்து விளக்கெண்ணெய் மற்றும் சிறிதளவு நைஸ் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சாம்பார் தூளை கையில் பிடித்தால் கொழுக்கட்டை பதத்திற்கு வரவேண்டும் இதுதான் சரியான பக்குவம் ஆகும். பிறகு அதை காற்று புகாத டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளவும்.இந்த சாம்பார் பொடியில் பெருங்காயம் சேர்க்கவில்லை உங்களுக்கு விருப்பம் என்றால் சேர்த்துக் கொள்ளலாம். நாம் அரைத்த இந்த சாம்பார் பொடியை சாம்பார் மட்டுமல்லாமல் காய்கறி பொரியல் ,புளி குழம்பு ,வத்தல் குழம்பு ஆகியவற்றிற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு விளக்கெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து சேகரித்து வைப்பதன் மூலம் நீண்ட மாதங்களுக்கு கெடாமல் இருப்பதோடு வண்டு வராமலும் இருக்கும். மேலும் நீண்ட நாட்களுக்கு அதன் நறுமணம் அப்படியே இருக்கும்.