வாழை இலை பூரண கொழுக்கட்டை செய்முறை ரகசியங்கள் இதோ.!
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சத்தான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
சென்னை- விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சத்தான வாழை இலை கொழுக்கட்டை செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.
தேவையான பொருள்கள்;
- பச்சரிசி மாவு அல்லது கொழுக்கட்டை மாவு= 1 கப்
- வெல்லம் =முக்கால் கப்
- நெய்= இரண்டு ஸ்பூன்
- வெள்ளை எள் = அரை ஸ்பூன்
- ஏலக்காய் தூள் =அரை ஸ்பூன்
- கடலைப்பருப்பு =50 கிராம்
- தேங்காய் துருவல்= அரை கப்
- தண்ணீர் =ஒரு கப்.
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு கொழுக்கட்டை மாவை சேர்த்து நன்கு கிளறவும். கிளறிய பிறகு அந்த மாவை ஆற வைத்து விட வேண்டும் . கடலைப்பருப்பை ஊறவைத்து வேகவைத்து மசித்து வைத்துக் கொள்ளவும்.மற்றொரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் எள் ,தேங்காய் துருவல் ,ஏலக்காய் தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு வெல்லத்தையும் அதிலே சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து விட்டு கிளறவும்.
வெல்லம் கரைந்த பிறகு மசித்து வைத்துள்ள கடலைப் பருப்பையும் சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது ஆற வைத்துள்ள மாவை நன்கு பிசைந்து கொள்ளவும் . வாழை இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொண்டு அதில் எண்ணெய் தடவி மாவை இலையில் வட்ட வடிவில் தட்ட வேண்டும். பிறகு நாம் செய்து வைத்துள்ள பூரணத்தை ஒருபுறம் வைத்து இலையுடன் சேர்த்து மடித்து கொள்ளவும். இவ்வாறு கொழுக்கட்டைகளை தயார் செய்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்தால் சத்தான வாழை இலை கொழுக்கட்டை தயார்.