தம்மா துண்டு சுண்டைக்காய் ஒளித்து வைத்திருக்கும் நன்மைகள்..ரத்த சோகை முதல் மூல நோய் வரை..!
சுண்டக்காய் –சுண்டைக்காய் எந்தெந்த நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது என்பதை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிராமப்புறங்களில் நோய் தீர்க்கும் காய்களில் சுண்டைக்காயும் ஒன்று. இது காய்கறியிலேயே மிகச் சிறிய காயாகும். 100 கிராம் சுண்டைக்காயில் 22.5 மில்லி கிராம் இரும்புச்சத்தும், கால்சியம் 390 மில்லி கிராம், பாஸ்பரஸ் 180 மில்லி கிராம் உள்ளது. இது தவிர இன்னும் பல சத்துக்கள் இந்த சின்ன காய்க்குள் அடங்கியுள்ளது. இந்த காய் சத்துக்களின் சேமிப்பு கிடங்கு என்றும் கூட கூறலாம்.
வயிறு பிரச்சனைகளை குணமாக்குகிறது;
வயிற்றுப் பூச்சியை அழிக்க சுண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடியது. அதனால் குழந்தைகளுக்கு சிறு வயது முதல் இருந்தே கொடுத்து வரவும். இதன் கசப்பு சுவை காரணமாக குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் அதனால் இதை சட்னி போல் செய்து கொடுக்கலாம்.
காய்ச்சலை குணமாக்கும்;
காய்ச்சல் வரும் சமயங்களில் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இது ரத்த வெள்ளை அணுக்களை அதிகரித்து காய்ச்சலை விரைவில் குணமாக்குகிறது. மேலும் அலர்ஜி, அரிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்களுக்கும் ஒரு சிறந்த காயாகும். அது மட்டுமல்லாமல் வாய்வு கோளாறையும் நீக்குகிறது.
சுவாசக் கோளாறுகளை குணமாக்கும் ;
ஆஸ்துமா, வறட்டு இருமல், நாள்பட்ட நெஞ்சு சளி இருப்பவர்கள் காய்ந்த சுண்டைக்காயை நல்லெண்ணையில் வறுத்து வத்தல் குழம்பாக சாப்பிட்டு வரவும். சுண்டைக்காயை நெய்யில் வறுத்து சாப்பிடுவதன் மூலம் மூலத்தினால் ஏற்படும் சூடு வயிற்றுக்கடுப்பு குணமாகிறது. மேலும் மூலத்தால் ஏற்படும் ரத்த கசிவும் நின்றுவிடும்.
உடல் உறுப்புகளை புதுப்பிக்கிறது ;
சுண்டைக்காய் வற்றல் சூரணத்தை ஒரு ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நம் உடலில் கல்லீரல் மற்றும் மண்ணீரல் உள்ள கழிவுகளை நீக்கி புதுப்பிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வதக்கி பொடி செய்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை வியாதியால் உண்டாகும் கை, கால் நடுக்கம், மயக்கம் ,வயிற்றுப் பொருமல் போன்றவை குணமாகிறது.
சுண்டைக்காய் கிடைக்கவில்லை எனில் அதை வற்றலாக வாங்கி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் கழிவுகள் நீங்கி புத்துணர்ச்சியாக இருக்கும்.ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுண்டக்காய் ஒரு வரப்பிரசாதம் எனலாம் .
ஆகவே சுண்டைக்காயின் கசப்புத் தன்மையால் சுண்டைக்காயை ஒதுக்காமல் அதன் இனிப்பான மருத்துவக் குணங்களை பெற வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆவது வற்றல் குழம்பாகவோ, சட்னியாகவோ, கூட்டாகவோ எடுத்துக் கொள்ளுங்கள்.