அடேங்கப்பா..! சாதாரண விக்கலில் இவ்வளவு விஷயம் இருக்கா..!
விக்கல் வந்த உடனே அனைவரும் கூறுவது யாரோ நினைக்கிறார்கள் என்று தான் அல்லது அந்த விக்கலை நிறுத்துவதற்கு முயற்சி செய்வோம். ஆனால் இந்த விக்கல் ஏன் வருகிறது, விக்கலை நிறுத்த என்ன செய்வது என்றும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
சில நேரங்களில் மார்பு பகுதிகளில் இருக்கும் நரம்புகள் மூளை கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக சுருங்கி விடுகிறது, இதனால் வழக்கமாக நாம் சுவாசிக்கும் காற்று குறுகிய நிலையில் செல்லும் போது தொண்டையில் ஒலி எழுப்புகிறது இதைத்தான் விக்கல் எனக் கூறுகிறோம். மேலும் கார்போஹைட்ரேட்டின் அளவு குறைந்தாலும் விக்கல் ஏற்படும்.
விக்கல் ஏற்பட காரணங்கள்:
விக்கல் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. உணவை வேகமாக சாப்பிடும் போதும், சூடான பொருட்களை எடுத்துக்கொள்ளும் போதும், தட்பவெப்ப நிலை காரணமாகவும் அதாவது குளிர்ச்சியான ஒரு இடத்தில் இருந்துவிட்டு வெயிலில் செல்வதால் ஏற்படலாம். மேலும் அளவுக்கு அதிகமாக உணவுகளை எடுத்துக் கொள்ளும் போதும், உடலில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் வரும்.
தொடர் விக்கல் வர காரணங்கள்:
ஒரு சிலருக்கு விக்கல் சில முறைகளை பயன்படுத்தும் போது நின்று விடும் ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் ஒரு சிலருக்கு விக்கல் நிற்காது அதற்கு சில உடலின் உள் அறிகுறிகளாக கூட இருக்கலாம் அல்சர் ரத்தத்தில் யூரியா கலப்பது சோடியம் பொட்டாசியம் அளவுகளில் மாற்றம் ஏற்படுவது மூளைக்காய்ச்சல் கணையம் அலர்ஜி கல்லீரல் வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் தொடர் விக்கல் ஏற்படலாம்.
விக்கலை நிறுத்தும் குறிப்புகள்:
- ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டு மெது மெதுவாக சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு சிலருக்கு விக்கல் நின்றுவிடும்.
- விக்கல் ஏற்பட்டவரின் கவனத்தை திசை திருப்பலாம் . அவர்கள் எதிர்பார்க்காத போது பயமுறுத்துதல் போன்ற ஷாக்கான செயல்களை செய்யும் போது அவர்களுக்கு விக்கல் நின்றுவிடும். இந்த முறையை இதய நோயாளிகளுக்கு செய்யக்கூடாது.
- முடிந்தவரை மூச்சை அடக்கி பின்பு வெளியிடலாம். அதிக நேரம் மூச்சை அடக்கி வைக்கக் கூடாது.
- விக்கல் வருபவருக்கு தும்மல் ஏற்பட வைத்தாலும் விக்கல் சரியாகிவிடும்.
- ஒரு கவரில் மூச்சை விட்டு மீண்டும் அந்தக் காற்றை சுவாசிக்கும் போது விக்கல் நின்றுவிடும். ஏனென்றால் கார்பன் டை ஆக்சைடை அதிகப்படுத்தும் போதும் விக்கல் நிற்கும்.
- மூக்கின் ஒரு பகுதியை அடைத்துக் கொண்டு மற்றொரு புறத்தில் மூச்சை விடவும் இவ்வாறு ஐந்து முறை மாற்றி மாற்றி செய்யலாம்.
எனவே முடிந்தவரை இந்த குறிப்புகளை பயன்படுத்தி பார்த்துவிட்டு பிறகு சரி வரவில்லை என்றாலும் அல்லது ஏற்கனவே ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு விக்கல் ஏற்பட்டிருந்தால் மருத்துவரை அணுகுவதே சிறந்தது.