தீபாவளி அன்று கட்டாயம் செய்ய வேண்டிய ஸ்பெஷல் லேகியம் செய்முறை..

தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பார்க்கலாம் .

legiyam (1)

சென்னை :தீபாவளி ஸ்பெஷல் லேகியம் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

பொதுவாக தீபாவளி பலகாரங்கள் எண்ணெய் , நெய், மாவு போன்றவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இது  நம் உடலில் செரிமான மண்டலத்தை பாதிக்கும் . மந்தம் ,வயிற்றுப்போக்கு, அஜீரணம், சோர்வு, வாந்தி போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் நம் முன்னோர்கள் தீபாவளிக்கு என்று  லேகியம் தயார் செய்து சாப்பிட்டு வந்தனர், அதை பலரும் காலப்போக்கில் மறந்து விட்டனர். லேகியம் தயார் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்;

  • தனியா= மூன்று ஸ்பூன்
  • மிளகு= ஒரு ஸ்பூன்
  • அரிசி திப்பிலி= ஒரு ஸ்பூன்
  • கண்டங்கத்திரி =ஒரு ஸ்பூன்
  • சுக்கு =ஒரு துண்டு
  • சித்தரத்தை =ஒரு துண்டு
  • விரலி மஞ்சள்= ஒரு துண்டு
  • சீரகம்= ஒரு ஸ்பூன்
  • ஓமம்= ஒரு ஸ்பூன்
  • கருப்பட்டி அல்லது வெல்லம்  =300 கிராம்
  • இஞ்சி= 100 கிராம்
  • நல்லெண்ணெய் =5 ஸ்பூன்
  • நெய் =இரண்டு ஸ்பூன்
  • தேன் =ஒரு ஸ்பூன்

செய்முறை;

1.ஒரு அகலமான பாத்திரத்தில் தனியா, மிளகு, திப்பிலி ,கண்டங்கத்திரி ,சுக்கு, சித்தரத்தை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொண்டு கடைசியாக சீரகம் மற்றும் ஓமம் சேர்த்து வறுத்து கொள்ளவும் .

2.பிறகு ஆறவைத்து மிக்ஸியில் பவுடராக்கி சலித்தெடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி நைசாக அரைத்துக் கொள்ளவும். கருப்பட்டியை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு தயார் செய்து கொள்ளுங்கள்..

3.மற்றொரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து கிளறவும். பிறகு அரைத்து வைத்துள்ள மருந்து பவுடரையும்  சேர்த்து நன்கு கலந்து விடவும்.

4.இப்போது மீண்டும் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஐந்து நிமிடங்கள் கிளற வேண்டும் .பிறகு தயார் செய்து வைத்துள்ள கருப்பட்டி பாகுவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

5.அதனுடன் நெய் இரண்டு ஸ்பூன் ஊற்றி நன்கு கலந்து கொண்டே இருக்க வேண்டும்.. நன்கு சுருள சுருள கலந்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கிளர வேண்டும்.

6.நன்கு எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறி இறக்கி மற்றொரு பாத்திரத்திற்கு  உடனே மாற்றி விடவும். இப்போது தீபாவளி ஸ்பெஷல் லேகியம் தயாராகிவிட்டது. இந்த லேகியத்தை 1 வாரம்  வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். தீபாவளி அன்று காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் ,இரவு ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் நல்ல ஜீரணத்தை கொடுக்கும்.

நன்மைகள் ;

  • இதில் உள்ள சுக்கு கொழுப்பை நன்றாக குறைக்கும் .
  • இஞ்சி செரிமானத்தை தூண்டும்.
  • மிளகு மற்றும் தனியா வாய்வு ஏற்படுவதை தடுக்கும்.
  • தேன் மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கும் .
  • ஓமம் உடலில் ஏற்படும் அஜீரணத்தை சரி செய்யும். மொத்தத்தில் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் மிகக் குறைவான அளவு ஒருமுறை எடுத்துக் கொள்ளலாம் .சர்க்கரை நோயாளிகள், அல்சர், நெஞ்செரிச்சல் ,வயிற்றுக் கோளாறுகளுக்கு மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் இந்த லேகியம் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்