Halwa : வாயில் போட்டவுடன் கரையக்கூடிய பேரீச்சம் பழ அல்வா செய்வது எப்படி..?
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பேரீச்சம் பழத்தை அப்படியே சாப்பிடுவதுண்டு. பேரீச்சம் பழத்தை பொறுத்தவரையில், அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது. இந்த பழத்தில், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், வைட்டமின்கள் ஏ, சி, கே மற்றும் பி போன்ற சத்துக்கள் உள்ளது.
பேரீச்சம் பழத்தில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது, இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது. அதே போல் இதில் உள்ள நார்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. தற்போது இந்த பதிவில், பேரீச்சம் பழத்தை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பேரீச்சம் பழம் – 2 கப் (கொட்டையில்லாதது)
- நெய் – 3 ஸ்பூன்
- ஸ்பூன் பாதாம் – 5
- முந்திரி – 5
- சோள மாவு – 2 ஸ்பூன்
- நாட்டுச்சக்கரை – 4 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
Halwa செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பவுலில் இரண்டு கப் கொட்டை இல்லாத பேரிச்சம் பழத்தை எடுத்து அதனுள் ஒன்றரை கப் வெந்நீரை ஊற்றி 15 நிமிடம் ஊற விட வேண்டும். அதன் பின் ஒரு மிக்ஸியில் தண்ணீரை வடித்து விட்டு பேரிச்சம் பழத்தை உள்ளே போட்டு சிறிது சிறிதாக வடித்து எடுத்த தண்ணீரை ஊற்றி மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பாதாம் மற்றும் முந்திரி இரண்டையும் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அதில் அரைத்து வைத்துள்ள பேரிச்சம்பழக் கலவையை உள்ளே ஊற்ற வேண்டும். அதனுடன் நாட்டு சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் பொரித்து வைத்துள்ள முந்திரி பாதாம் ஆகியவற்றை போட்டு நன்கு கிளற வேண்டும்.
இதற்கு இடையில் ஒரு பவுலில் சோளமாவு இரண்டு ஸ்பூன் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இந்த சோள மாவு கலவையை அதில் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு வரும் வரை கெட்டியாக கிளறி எடுத்து, நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் அதனை ஊற்றி வைத்து சில மணி நேரங்களுக்கு பின்பு எடுத்து வெட்டி பரிமாறலாம்.
நாம் கடைகளில் விலை கொடுத்து அல்வா வாங்குவதற்கு பதிலாக வீட்டிலேயே இப்படிப்பட்ட சத்தான அல்வாவை செய்து சாப்பிடலாம். இந்த அல்வா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் மெலிந்த நிலையில் உள்ளவர்கள் இந்த அல்வாவை சாப்பிட்டு வந்தால் விரைவில் பருமன் ஆவார்கள்.