சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி?
நமது அன்றாட வாழ்வில், நமது சமையல்களில் காய்கறிகள் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது. அதிலும், உருளைக்கிழங்குகளை பயன்படுத்தி நாம் செய்கின்ற அனைத்து சமையல்களையும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவதுண்டு.
தற்போது இந்த பதிவில் சுவையான உருளைக்கிழங்கு மசாலா கறி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- உருளைக்கிழங்கு – 1
- கரத – 1
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – ஒன்று
- கொத்தமல்லி, புதினா – ஒரு மேசைக்கரண்டி
- வெங்காயம் – 1
- மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
- கறிமசால் தூள் – அரை தேக்கரண்டி
- மாயாஜால் தூள் – அரை தேக்கரண்டி
- தேங்காய் – 4 மேசைக்கரண்டி
தாளிக்க
- எண்ணெய் – சிறிதளவு
- பட்டை – 1 துண்டு
- ஏலக்காய் – ஒன்று
- கிராம்பு – 2
- காய்ந்த மிளகாய் – ஒன்று
- கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து சதுர துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின், கேரட், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்க வேண்டும். பின் தேங்காய் துருவலில் பாதியை அரைத்து பால் எடுக்க வேண்டும். பின் மீதியை நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
பின் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும். பின் வெங்காயத்தை முதலில் போட்டு வதக்கி விட்டு, தக்காளி, கேரட் மற்றும் கறிவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.
இவை பாதி வதங்கியவுடன், உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து தூள் வகைகளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் தேங்காயில் இருந்து எடுத்த இரண்டாவது பாலை ஊற்றி காய்களை நன்றாக வேகா விட வேண்டும். வெந்தவுடன் முதல் பாலை ஊற்றி, சூடேறியதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.