Carrot Halwa : உங்க வீட்ல கேரட் இருந்தா இப்படி செய்து பாருங்க..!
நாம் நமது வீடுகளில் கேரட்டை வைத்து கூட்டு, பொரியல், குழம்பு என பல வகையில் சமையல்களை செய்திருப்போம். தற்போது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த கேரட்டை வைத்து வித்தியாசமான, குழந்தைகளுக்கு பிடித்த ஒரு அட்டகாசமான ரெசிபி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கேரட் – அரை கிலோ
- பால் – அரை கப்
- சீனி – அரை கப்
- நெய் – 1 ஸ்பூன்
- முந்திரி – 5
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- சோள மாவு – ஸ்பூன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கேரட்டை தோல் சீவி கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு குக்கரில் சீவி வைத்துள்ள கேரட், அரை கப் பால் ஊற்றி மூன்று விசிலுக்கு விட்டு நன்கு அவிய விட்டு எடுக்க வேண்டும்.
அதன் பின்பு அந்த கேரட்டை மிக்ஸியில் அரைக்காமல் கரண்டியை வைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். கேரட் சிறு சிறு துண்டுகள் கிடப்பது போன்ற நிலையில் நன்கு மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு அதனுள் சீனி அரை கப் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
அதனுடன் ஒரு ஸ்பூன் நெய் , முந்திரி, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிட்டு பின்பு சோள மாவில் ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து அதனுள் ஊற்ற வேண்டும். இப்பொது கேரட் அல்வா பதத்திற்கு வந்து விடும். பின் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
இப்போது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய கேரட் அல்வா தயார். கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி அல்வா போன்ற முறையில் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கேரட்டில் உள்ள பயன்கள்
கேரட் ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது. கேரட்டில் உள்ள நார்ச்சத்துக்கள், செரிமானத்தை மேம்படுத்தவும் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
மேலும், கேரட்டில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ கண்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.