மருத்துவ ரீதியில் மேற்கொள்ளுகிற தியானம் பலன் தருமா…..?
மருத்துவத்தால் குணமாகாத பல நோய்கள், தியானம் மற்றும் யோகா போன்ற பயிற்சிகள் மூலம் குணாமாகுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பரபரப்பும் பதற்றமும் நிறைந்த இன்றைய நவீன வாழ்க்கை முறையில் அமைதித் தேடி எல்லோரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு பக்கவிளைவு இல்லாத பலன் தரும் நிவாரணமாக இருக்கிறது தியானம். அமைதியுடன் ஆனந்தமும், ஆரோக்கியமும் அளிக்கும் மருந்தாகவும் தியானம் பெருமை பெறுகிறது.
தியானம் :
தியானம் என்பது பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே தோன்றியது. ஆரம்ப காலங்களில் இறைவனை அடையும் ஆன்மிக வழி என்றே பலரும் தியானம் பற்றி நினைத்து வந்திருக்கிறார்கள். யோகாவுக்கும் இப்படி ஒரு நிலைதான். ஆனால், விஞ்ஞானம் வளர்ச்சி பெற்ற பிறகு இந்த எண்ணம் மாறத் தொடங்கியது.
மனதை ஒரு நிலைப்படுத்துகிறது :
பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் தியானத்தின் பலன்களை கவனிக்கத் தொடங்கிய பிறகுதான் மருத்துவரீதியான முக்கியத்துவமும் தியானத்துக்கு உண்டு என்பது தெரிய வந்தது. தியானம் செய்வதனால் கோபம், ஆணவம், பிடிவாதம், எதன் மீதும் பற்றின்மை, அமைதியின்மை போன்றவை விலகி நம் மனது ஒரு நிலைப்படுகிறது. குறிப்பாக, உள் மன உணர்வை வலுப்படுத்தவே தியானம் மிக அவசியமாகிறது.
மனசாந்தம் :
தியானம் செய்வதால் மருத்துவரீதியாக நாம் பல நன்மைகளை அடைகிறோம். ஞாபக சக்தி, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது. மன அழுத்தம், மன உளைச்சல், வீணாக பதற்றப்படுவது போன்ற எதிர்மறை எண்ணங்கள் குறைகிறது. மனதை சாந்தப்படுத்த தியானம் மிகவும் முக்கியமானது.
தீய பழக்கங்களில் இருந்து விடுதலை பெற :
பொதுவாக மன அழுத்தம் இருப்பவர்கள் புகைப்பிடிப்பது, குடிப்பது என தீய பழக்கங்களை செய்வதுண்டு. எனவே, அவர்கள் தங்களுடைய மன அழுத்தம் குறைய தியானம் செய்தால் அவர்களின் மன அழுத்தம் குறையும். தீய பழக்கங்களிலிருந்து தம்மை எளிதில் விடுவித்துக் கொள்ளலாம். தியானம் கற்கும் ஆற்றலை அதிகரிக்கிறது. நம் கவனத்தை கூர்மைப்படுத்துகிறது. நம்மை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
விடியற்காலை தியானம் :
விடியற்காலை மற்றும் மாலை நேரம் தியானம் செய்வது உகந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான நேரம் பிடிக்கும், புதிதாக தியானம் செய்பவர்கள், நினைவுகள் கட்டுப்படுத்த முடியாமல் சிறிது கஷ்டப்படுவார்கள். எனவே, அவர்கள் மனநிலையைக் கட்டுப்படுத்தி முழுநிலையை அடைவதற்கு சில கால அவகாசம் தேவைப்படும்.
இதய நோயாளிகளுக்கு உகந்தது :
தியானத்தை மட்டும் தனியாக மேற்கொள்வதைவிட யோகா மற்றும் மூச்சுப்பயிற்சியுடன் சேர்ந்து செய்வது இன்னும் சிறப்பு. இதனை அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மேற்கொள்ளலாம். இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோருக்கு யோகா மற்றும் மூச்சுப்பயிற்சிகள் கடினமாக இருக்கும். இத்தகைய உடல்நலப் பிரச்னை கொண்டவர்களுக்கு தியானம் சுலபமானது. நல்ல ஆரோக்கியமும் பெற முடியும்.