அதிகமாக வலி மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் ஏற்படும் பாதிப்புகள்..!
நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் .
சென்னை –நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மருத்துவ பிரச்சனைகளான தலைவலி, உடல் வலி ,காய்ச்சல் ,மூட்டு வலி என அனைத்து வலிகளையும் கட்டுப்படுத்த வலி மருந்துகளை பயன்படுத்துவோம். இதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர் அதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
வலி மருந்து என்றால் என்ன?
நம் உடலில் உண்டாகக்கூடிய வலி உணர்வை நரம்பு மண்டலம் மூளைக்கு கடத்தும் ஆற்றலை தடுப்பதே வலி மாத்திரையின் வேலையாகும் . இந்த வலி மருந்துகளை நமக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் , அறுவை சிகிச்சையினால் ஏற்படும் வலியை தடுப்பதற்காகவும் ,உடலில் தாங்க முடியாத வலிகளை கட்டுப்படுத்தவும் மருத்துவர்களால் தற்காலிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் நம்மில் சிலர் மருத்துவர் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்து சீட்டை பயன்படுத்தி மீண்டும் மீண்டும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துவோம் இதனால் அலர்ஜி தொடங்கி உள் உறுப்புகள் வரை பாதிக்கச் செய்கிறது.
வயிற்றுப் புண்கள்;
அல்சர் வர பல காரணங்கள் இருந்தாலும் அதிகமாக வலி மாத்திரைகளை எடுக்கும் போதும் அல்சர் வரும் என்றும் கூறப்படுகிறது .தொடர்ச்சியாக வலி மாத்திரைகள் உட்கொள்ளும்போது வயிற்றின் உட்சுவர் பாதிக்கப்பட்டு புண்கள் ஏற்படுவதோடு வயிற்றில் ரத்தக் கசிவையும் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நரம்பு மண்டல பாதிப்பு;
வலி மாத்திரைகளின் முக்கியமான வேலை உடலில் ஏற்படக்கூடிய வலிகளை நரம்பு மண்டலம் மூலம் மூளைக்கு கடத்துவதை தடுப்பதாகும் தொடர்ந்து அதிகமாக வலி மாத்திரைகள் உட்கொள்ளும் போது கை கால் நடுக்கம், உள்ளங்கை உள்ளங்கால் எரிச்சல்,உடல் தடுமாற்றம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
சிறுநீரக பாதிப்பு;
சிறுநீரகத்தில் ப்ரோஸ்டாகிளாண்டின் எனும் என்சைம் உற்பத்தியை குறைக்க செய்கிறது . சிறுநீரகத்தில் ரத்த ஓட்டம் குறைந்து டாக்ஸின் அளவு அதிகமாகின்றது. இதன் மூலம் கிட்னி பாதிப்புக்குள்ளாகிறது .
மாரடைப்பு;
நீண்ட நாட்கள் தொடர்ந்து வலி மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும் குறைக்கிறது மேலும் இதயத்தில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது .
கல்லீரல் பாதிப்பு;
மது அருந்தினால் தான் கல்லீரல் நோய் வரும் என கூறி விட முடியாது ,அதிகமாக தொடர்ச்சியாக வலி மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போதும் கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வலி மாத்திரைகளை தவிர்க்க வேண்டியவர்கள்;
பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் ,குழந்தை பேருக்காக காத்திருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் வலி மாத்திரை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை எடுக்கும் சூழல் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் சர்க்கரை நோய், இதய நோய், ரத்த கொதிப்பு உள்ளவர்களும் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் வலி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் வலி மாத்திரை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வலி மாத்திரைகளை உட்கொள்வதற்கு முன் கட்டாயம் உணவு சாப்பிட்ட பின் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் .அப்போதுதான் வலி மருந்துகளால் உண்டாகும் பாதிப்பு சற்று குறையும் ,ஏனெனில் வலி மருந்துகள் மெட்டபாலிசம் ஆக அதிக எனர்ஜி மற்றும் குளுக்கோஸ் தேவைப்படும்.. ஆகவே வலி மாத்திரைகளை அளவோடும் மருத்துவரின் ஆலோசனையின் படி மட்டுமே பயன்படுத்து வேண்டும்.