உங்க குழந்தைங்க அறிவாளியாகணுமா?. அப்போ இந்த ஒரு யோகா போதும்..!
Chennai-தோப்புக்கரணம் போடுவது என்பது காலம் காலமாக தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது . பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் இதைத்தான் தண்டனைகளாக கொடுப்பார்கள்.தண்டனையில் கூட நம் முன்னோர்கள் அறிவியலையும் வைத்து சென்றுள்ளனர் என்பதில் நம் பெருமிதம் கொள்ள வேண்டும் .
தவறு செய்தால்தான் தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில்லை தினமும் உடற்பயிற்சி செய்வது போல் தோப்புக்கரணமும் போட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்று யோக கலை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்..
தோப்புக்கரணம் போடும் முறை;
இந்த தோப்புக்கரணத்தை போடுவதற்கு எந்த ஒரு விலை உயர்ந்த உபகரணங்களும் தேவையில்லை. எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யும் சிறந்த பயிற்சியாகும்.
முதலில் உங்கள் தோள்பட்டை அளவுக்கு கால்களை விரித்துக் கொள்ளுங்கள். இடது கை வலது காதின் மடல்களிலும் ,வலது கைகள் இடது காதின் மடல்களையும் பிடித்துக் கொண்டு கட்டைவிரல் வெளிப்புற ஆகவும், ஆள்காட்டி விரல் உள்புறமாகவும் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.
மேலும் வலது கை இடது கைக்கு மேல்தான் இருக்க வேண்டும். இப்போது தலையை நேராக வைத்து மூச்சுக்காற்றை உள் இழுத்துக் கொண்டு கீழே உங்களால் முடிந்த அளவுக்கு உட்கார்ந்து எழ வேண்டும் .அப்படி எழும்போது மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்.
தினமும் ஐந்து நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்து வரலாம். ஆரம்ப காலத்தில் செய்யும்போது இரண்டு நிமிடம் செய்ய வேண்டும் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொள்ளலாம்.இதுபோல் முறையாக செய்தால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும் .
தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்;
நம்முடைய காது மடல்களில் தான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளின் முக்கிய புள்ளிகள் உள்ளது ,இதை தூண்டச் செய்யும்போது உள் உறுப்புகள் சீராக இயங்குகிறது. உட்கார்ந்து எழும்போது காலில் உள்ள சோலியஸ் என்ற தசை இயங்க ஆரம்பிக்கும். இந்த தசை உடல் முழுக்க ரத்தத்தை சீராகச் செல்ல உதவி செய்கிறது. இதனால் இதயத் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
குழந்தைகள் தினமும் இந்த பயிற்சியை செய்து வருவதன் மூலம் மூளையின் செயல்திறன் அதிகமாகும். அவர்களின் சிந்திக்கும் திறன் ,அறிவாற்றல் மேம்படுத்தப்படும். மேலும் நல்ல ஞாபக சக்தியை அதிகரித்து ஞாபக மறதி வருவதை தடுக்கும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாமல் செய்யும் செயலில் ஊக்கத்தை உண்டாக்கும். மனச்சோர்வை விலக்கும். கை, கால் தசைகள் இறுகி வலுவாக்கப்படும். ஓட்டப்பந்தய வீரர்கள் அவர்களின் ஆற்றல் அதிகரிக்க வேண்டுமென்றால் தினமும் தோப்புக்கரணம் பயிற்சியை செய்து வருவது சிறந்தது என கூறப்படுகிறது.முதுகு தண்டுவடம் நேராக்கப்பட்டு கூன் விழுவதும் தடுக்க படுகிறது .
மேலை நாடுகளில் சூப்பர் பிரைன் யோகா என்று இன்றும் கடைபிடித்து வருகின்றனர். ஆகவே தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சியை செய்ய முடியாதவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்து வந்தாலே போதும் என்று பல மருத்துவர்களும் ஆலோசனை கூறி வருகின்றனர்.