கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள் ? உங்களை தேடி வரும் ஆபத்து.!
மனிதர்கள் உதவிக்காக செல்போன் கண்டறியப்பட்டது என்பது மாறி தற்போது செல்போன் பயன்பாடில்லாமல் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு நவீன உலகம் மாறிவிட்டது. செல்போன் இல்லாமல் 10 நிமிடங்கள் கூட பலரால் இருக்க முடியவில்லை. தூங்கும்போது கூட பாடல் கேட்டால் தான் தூக்கமே வருகிறது எனும் அளவை தாண்டி கழிவறைக்கு கூட செல்போன் இல்லாமல் பலர் செல்வதில்லை.
கழிவறையில் செல்போன் பயன்பாடு என்பது பேராபத்து என்று பல செய்திகள் உலா வந்தாலும், விழிப்புணர்வு வீடியோ பதிவு என்றாலும் அதனை கூட கழிவறையில் தான் பலர் படிக்கின்றனர், பார்க்கின்றனர் என்பதே இங்கு வேடிக்கையான உண்மையாக உள்ளது.இந்தப் பழக்கம் சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
செல்போன் பயன்பாடு :
செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினாலே, கழுத்து வலி , மணிக்கட்டு வலி , முழங்கை வலி, மன உளைச்சல், தூக்கமின்மை, மன சோர்வு என வருகிறதே, அதனை விட அதிகமாக உடல் ரீதியான பிரச்சனைகளை வரவேற்கிறது கழிவறையில் செல்போன் கொண்டு செல்லும் கெட்ட பழக்கம்.
கழிவறை நேரம் :
,முன்னதாக கழிவறையில் நாம் கழிக்கும் நேரம் என்பது 5-10 நிமிடம் என்ற அளவிலேயே இருந்து வந்துள்ளது. ஆனால் செல்போன் உடன் தற்போது செல்வதால் குறைந்த பட்சம் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்களை தாண்டியும் சிலர் கழிவறையில் செல்போன் பயன்படுத்துகின்றனர்.
செல்போனில் பெருகும் கிருமிகள் :
இதன் காரணமாக, சால்மோனெல்லா , இ கோலி எனும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் உருவாகிறதாம். கழிவறையில் உருவாகும் இது போன்ற கிருமிகள், செல்போனில் தொற்றி, அதனை சர்ஜ் செய்யும் போது சூடாகி அந்த கிருமிகளும் பெருகி 3 முதல் 4,5 நாட்கள் வரை உயிர் வாழ்கிறதாம். இவை குறைந்த பட்சம் மலச்சிக்கல் முதல் மூலம் வரை உடல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆய்வு முடிவுகள் :
அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வின்படி, கழிவறை இருக்கைகளை விட செல்போன்கனில் படிந்து இருக்கும் கிருமிகள் 10 மடங்கு அதிக ஆபத்தை தரவல்லது என்கிறார்கள். மற்றொரு ஆய்வில், ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்களில் 74.5 சதவீத மக்கள் தங்களது செல்போனை கழிவறைக்கு கொண்டு செல்வதை வழக்கமாக வைத்து உள்ளனர் என்று கூறுகிறார்கள்.
கழிவறைக்கு சென்று வந்த பிறகு நீங்கள் வெளியே வந்து சோப்பு போட்டு கைகளைக் கழுவினாலும், செல்போனில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகளை நம்மில் பலர் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை.
உடல் பாதிப்புகள் :
- நேரம் கடந்து இடுப்புக்கும் காலுக்கும் அழுத்தம் கொடுத்து, குறுக்கி அமர்ந்திருப்பதும், கழிவறையில் இருந்து வரும் ரசாயன வெப்பமும் மூல நோய் பிரச்சினையை ஏற்படுத்தும்.
- கழிவறையில் நேரம் கழிப்பது இரைப்பை மற்றும் பெருங்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- கழிவறைக்குள் செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் அபாயம் உள்ளது. அதுவும் நீண்ட நேரம் குறுக்கி அமர்ந்திருப்பது தான் காரணமாக அமைகிறது.
- கழிவறையில் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தும் போது நமது சிறுநீர் செல்லும் உறுப்பும் அதிக நேரம் கழிவறையில் அதுவும் கிருமி பரவும் இடத்திற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும். இதனால் சிறுநீர் பாதை வெளியாக எளிதில் நோய்த்தொற்று ஏற்படும்.
தீர்வு :
கழிவறை என்பது நமது உடலில் உள்ள கழிவுகளை கழிக்க மட்டுமே என்பதை புரிந்து கொண்டு, எப்போது கழிவுகளை வெளியேற்ற நேரம் வருகிறதோ, அப்போது காலம் தாழ்த்தாமல் சென்று உடனடியாக கழித்துவிட வேண்டும். அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு மேல் கழிவறையில் உட்காரா கூடாது. காலம் தாழ்த்துவதும் உடல் பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
சுய பரிசோதனை :
கழிவறையில் செல்போனை தவிர்பபது உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளும் ஓர் சிறிய முயற்சி. ஒரு 10 நிமிடங்கள் செல்போன் இல்லாமல் உங்களால் இருக்க முடியுமென்றால், அதனை கொஞ்சம் கொஞ்சமாக நீட்டித்து சாப்பிடும்போது செல்போன் தவிர்ப்பு, குடும்பத்தினருடன் பேசும் போது செல்போன் தவிர்ப்பு என செல்போன் பயன்படுத்தும் நேரத்தை தவிர்பபது உண்மையில் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்யமான ஓர் நல்ல நகர்வாகும். கவனச்சிதறல்கள் எதுவும் இல்லாமல் கழிப்பறையில் தனியாக நேரத்தைச் செலவிடுவது மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.