உங்க வீட்ல முருங்கைக்காய் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை செய்து பாருங்க..!

நமது வீடுகளில் பல்வேறு வகையான மரம், செடி, கொடிகள் இருக்கும். அதில் பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கைக்காய் மரம் இருக்கும். முருங்கை மரத்தை பொறுத்தவரையில் அதில் உள்ள பூ, இலை, செடி, வேர், பட்டை என அனைத்துமே நாம் பயன்படுத்தக்கூடிய ஒன்று தான்.
முருங்கைக்காயின் நன்மைகள்
முருங்கைக்காய்க்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கைகாயில் அதிக அளவு வைட்டமின் சி உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
முருங்கைக்காய்க்காயில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும்.
தற்போது இந்த பதிவில் முருங்கைக்காயை வைத்து Pulp கூட்டு செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முருங்கைக்காய் – 3
- பாசி பருப்பு – 1 கப்
- கத்தரிக்காய் – கால் கிலோ
- மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தேங்காய் (துருவியது) – ஒரு கைப்பிடி
- சின்ன வெங்காயம் – 4
- பூண்டு – 1 பல்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 2
செய்முறை
முதலில் முருங்கைக்காய் ஒவ்வொன்றையும் நான்கு துண்டுகளாக வெட்டி அதனை நாம் இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி, அதனுள் பாசிப்பருப்பை கழுவி சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்தரிக்காய் சேர்த்து, சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிட்டு பின்பு நன்கு அவிய விட வேண்டும்.
அதன் பின் ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய் ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் நான்கு, பூண்டு ஒரு பல், சீரகம் ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் இரண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு இடையில் நாம் அவித்து வைத்துள்ள முருங்கைக்காயில் உள்ள சதைப்பகுதியை மட்டும் கத்தியை வைத்து தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதனை தொடர்ந்து பாசிப்பருப்பு மற்றும் கத்தரிக்காய் நன்கு அவிந்து வரும் நிலையில், முருங்கைக்காயின் சதைப் பகுதியை அதனுடன் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். அதன் பின் நாம் அரைத்து வைத்துள்ள கலவையை அதனுள் சேர்த்து கிளறி விட வேண்டும். அதன் பின் தனியாக ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை மூன்றையும் சேர்த்து தாளித்து அதனுள் ஊற்ற வேண்டும். இப்போது இதனை சூடாக பரிமாறலாம்.