உங்களுக்கு அதிகமா முகப்பரு வருதா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!
முகப்பரு வருவதற்கான காரணங்களும் அதற்கான வீட்டு குறிப்புகளையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
இளம் வயதினருக்கு முகப்பரு என்பது பெரிய பிரச்சனையாகவும் பாரமாகவும் இருக்கும். இது மனதளவில் சிலரை பாதிக்க செய்கிறது.அதனால் வெளி இடங்களுக்கு செல்வதை கூட தவிர்த்து விடுவார்கள் .
முகப்பரு வர காரணங்கள்;
முகப்பரு வயதின் அடிப்படையில் வரக்கூடிய ஒன்று இதுதான் அறிவியல். உடலில் சுரக்கும் இரண்டாம் நிலை பருவ ஹார்மோன் 11 வயதில் இருந்து சுரக்க ஆரம்பிக்கும். இந்த ஹார்மோன் உடலில் புதிதாக சுரக்கும் அந்த பருவ காலத்தில் முகத்தில் பருக்களாக வெளிப்படும் .இந்த ஹார்மோன் உடலை அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் கொண்டு செல்கிறது.
முகப்பருக்கள் கட்டியாகவோ அல்லது சீழ் பிடித்திருந்தால் அந்த சமயத்தில் அதற்கான மருத்துவ ஆலோசனையை செய்து கொள்ளவும். சிறிதாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை. முகப்பரு இருக்கும் பெரும்பாலானோர் நினைப்பது ஒரு சிலருக்கு மட்டும் முகம் க்ளியர் ஆக இருக்கிறது நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரு உள்ளது என்று நினைப்பார்கள்.
அதற்குக் காரணம் அந்த இரண்டாம் நிலை ஹார்மோனின் அளவு சற்று உங்களுக்கு அதிகமாக சுரக்கும் என்பதுதான். இதற்காக நீங்கள் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை . மேலும் அதிக உடல் வெப்பம் மற்றும் மரபணுக்களின் ரீதியாகவும் முகப்பருக்கள் வரும். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த முகப்பருக்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தானாகவே குணமாகிவிடும்.
உணவு முறை;
உடல் சூட்டை தணிக்கும் உணவு முறைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முகப்பருக்கள் வருவது குறைக்கப்படுகிறது.
அரை ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் கலந்து காலையில் குடித்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடல் வெப்பநிலை சீராகும்.
உள்ளங்கை அளவு சோற்றுக்கற்றாழையை எடுத்து தோல் சீவி அதில் உள்ள ஜெல்லை ஆறு முறை தண்ணீரில் கழுவி பிறகு உட்கொள்ளலாம்.
வெண்பூசணியின் உள்சுவரை ஜூஸாக அரைத்து அதில் இனிப்பு சுவைக்காக தேன் அல்லது நாட்டுச்சக்கரை கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 50 – 100 எம்எல் வரை எடுத்துக் கொள்ளலாம்.
பழைய சாதம் கஞ்சி காலையில் முதல் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலமும் உடல் சூடு தணிக்கப்படுகிறது. இதன்மூலம் முகப்பருக்களின் தாக்கம் குறைக்கப்படும்.
மேலும் அடிக்கடி அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் இந்த அசைவ உணவுகள் ஹார்மோனின் அளவை கூட்டக்கூடியது.
முகப்பருக்கான மேல் பூச்சி மருந்து;
வேப்பங் கொழுந்தை மஞ்சளுடன் அரைத்து ஃபேஸ் பேக்காக தடவி இரண்டு மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வரவும்.[ இரண்டு மடங்கு வேப்பிலை சேர்த்தால் ஒரு மடங்கு மஞ்சள் சேர்க்க வேண்டும்.] இவ்வாறு செய்வதன் மூலம் பருக்கள் குறைந்த விடும். கரும்புள்ளிகள் நாளடைவில் மறைந்து விடும்.
ஆண்கள் மஞ்சளுக்கு பதிலாக நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் மஞ்சட்டியை சேர்த்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் பிராணயாமா போன்ற மூச்சுப் பயிற்சிகளையும் செய்து வர வேண்டும்.
இதுபோல் உணவு முறை ,மேல் பூச்சு ,யோகா போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்து பாருங்கள்.. இதற்கும் குணமாகவில்லை என்றால் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும்.
எனவே இதை படிப்பதோடு மட்டுமல்லாமல் பயன்படுத்தி பாருங்கள் மாற்றம் காணலாம்.