அடடே.!இனிமே முட்டை பப்ஸ் வீட்டிலேயே ஈஸியா செய்யலாமா?
முட்டையை வைத்து நாம் பல ரெசிபிகள் செய்திருந்தாலும் முட்டை பப்ஸ் என்றால் கடைகளில் தான் வாங்கி ருசித்து இருப்போம் ஆனால் வீட்டிலேயே மிக சுலபமாக செய்யலாம் அது எப்படின்னு இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:
- முட்டை =2
- மைதா =300கிராம்
- பெரிய வெங்காயம் =2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் =1ஸ்பூன்
- சோம்பு =1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் =1/2 ஸ்பூன்
- மல்லித்தூள் =1/2 ஸ்பூன்
- கரம் மசாலா =1/2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
- எண்ணெய் =தேவையான அளவு
- உப்பு சிறிதளவு
செய்முறை:
மைதா மாவுடன் சிறிதளவு உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிறகு அந்த மாவை ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மேலே தடவி அரை மணி நேரம் ஊற வைக்கவும், இவ்வாறு செய்யும் போது மாவு காயாமல் இருக்கும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவும் ,அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித்தூள் ஆகியவற்றையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும். இரண்டு முட்டைகளை வேகவைத்து எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஊற வைத்துள்ள மாவை நான்கு உருண்டைகளாக பிரித்து அதை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளவும் .பிறகு ஒரு உருண்டையில் தேய்த்த மாவின் மீது சிறிதளவு மாவு தூவி அதன் மீது மற்றொடு தேய்த்த மாவை வைத்து மேலே நெய் அல்லது வெண்ணையை தடவிக் கொள்ளவும் அதன் மீதும் மற்றொரு பகுதியை சேர்த்து மேலே சிறிதளவு மாவு தூவி அதன் மீது நெய் சேர்த்து தடவிக் கொள்ளவும் இவ்வாறு நான்கையும் சேர்த்து நெய் சேர்த்து தடவி அதை நான்கு பகுதிகளாக பிரித்து ஒவ்வொன்றையும் சதுர வாக்கில் தேய்த்து எடுத்து வைக்கவும்.
இப்போது நாம் செய்து வைத்துள்ள வெங்காய மசாலாவை தேய்த்து வைத்துள்ள மாவில் வைத்து அதன் மீது அறை பகுதி முட்டையை வைத்து மசாலா தெரியாதவாறு மூடிக்கொள்ளவும் இவ்வாறு நான்கு பப்ஸ்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதிலே நாம் எடுத்து வைத்துள்ள பப்சை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். இப்போது சுவையான மொறு மொறுவென முட்டை பப்ஸ் ரெடி.
இந்த மாதிரி வீட்டிலேயே நாம் சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுக்கலாம்.