மலச்சிக்கல் பிரச்சினையா.?காரணம் மற்றும் தீர்வு.!
சென்னை: மலச்சிக்கல் என்பது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் ஒரு சமூக நோயாகவே மாறி வருகிறது. இது எதனால் வருகிறது? எப்படி சரி செய்வது? என்ற கேள்விகள் எழலாம். தலைவலி, காய்ச்சல் போல் மலச்சிக்கல் பிரச்சினையை யாரும் வெளிப்படையாக சொல்ல விரும்புவது இல்லை. மருத்துவரை அனுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் தயக்கம். மலம் கழிக்க முடியவில்லை என்று ஒரு மருத்துவ சிகிச்சையா? சீ அதுவே சரியாகி விடும் என்ற எண்ணம். இது முற்றிலும் தவறானது. மலச்சிக்கல் பிரச்சினையை சாதாராணமாக கடந்து செல்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்களே வைத்துக்கொள்ளும் சூணியம் என்றே கூறலாம்.
இது குறித்து சிவக்குமார் என்ற மருத்துவர் தனது யூடியூப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறிய விஷயங்கள் மற்றும் இது தொடர்பான மருத்துவ ஆய்வு கட்டுரைகளில் பல்வேறு விழிப்புணர்வு காரணிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவை பொருத்தவரை நூற்றுக்கு சுமார் 14 சதவீதம் மக்கள் மலச்சிக்கலால் அவதிப்படுவதாகவும், இதில் 60 சதவீதம் மக்கள் மருந்து மாத்திரைகளை தவிர்த்து விட்டு, வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றுபவர்களாகவும் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மலச்சிக்கல் என்றால் என்ன? நாள்தோறும் காலைக் கடன் கழிப்பது என்பது நமது உடல் ஆரோக்கியமாக உள்ளது என்பதை உறுதி செய்யும் நிலையாகும். ஆனால் இதில் மாற்றம் ஏற்படும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது வாரத்தில் 3 நாள் அல்லது அதற்கும் அதிகமான நாட்கள் மலம் கழிக்காமல் இருப்பது, அப்படி கழித்தாலும் முழுமையாக சுத்தம் ஆகாமல் குறைவாக மலம் வெளியேறுவது, மலம் கழிக்கும்போது ஆசன வாயில் வலி மற்றும் ரத்த கசிவு ஏற்படுவது, மிகவும் இருக்கமாக மலம் வெளியேறுவது உள்ளிட்ட காரணிகள்தான் மலச்சிக்கலுக்கான அறிகுறிகளும் கூட.
இப்படியான நிலை ஏற்பட என்ன காரணம்? பொதுவாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் நபர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படலாம். ஆனால் எவ்வித காரணமும் இன்றி சாதாரணமான வாழ்வியல் சூழலில் இருக்கும் நபர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் அதை கண்காணித்து தீர்வு காண வேண்டும் என்றே மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அந்த வகையில் ஒருவருக்கு பொதுவாக மலச்சிக்கல் ஏற்பட அன்றாட வாழ்வியல் நடைமுறையாக இருக்கும் உணவு உட்கொள்ளுதல், அதில் நார்ச்சத்து மிக்க உணவுகளை தவிர்த்தல், நீராகாரம் மிக்க உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல் அல்லது மிகக்குறைவாக உட்கொள்ளுதல், உடல் உழைப்பு இல்லாமல் இருத்தல் உள்ளிட்டவையே காரணிகளாக அமைகிறது என மருத்துவ ஆய்வுகளும் கூறுகின்றனர்.
மலச்சிக்கலை கண்டுகொள்ளாமல் விட்டால் என்ன நடக்கும்? பெருங்குடலில் தேங்கும் மலம் நீண்ட நாட்கள் வெளியேறாமல் இருந்தால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வழிவகை செய்யும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். குடல் பிரச்சினை, புற்று நோய் ஆபத்து, உடல் மற்றும் மனசோர்வு, ஆசன வாய் பிரச்சினை, மூல நோய் உள்ளிட்ட பல உடல்நல கோளாறுகள் ஏற்படலாம்.
தீர்வு என்ன? பழங்கள், நார்ச்சத்து மிக்க காய்கறிகள், கொட்டை வகைகள், கீரை உள்ளிட்ட உணவுகளை அன்றாடம் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும், மோர் மற்றும் பழய சாதம் உள்ளிட்டவை உங்கள் குடல் பகுதியில் நல்ல பேக்டீரியா உருவாகவும், குடல் தனது வேலையை சரியாக செய்யவும் உதவும். அதேபோல், உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
மலச்சிக்கல் பிரச்சினைக்கு மட்டும் அல்ல, உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சி தீர்வாக உள்ளது. அதேபோல், துரித உணவுகளை தவிர்த்தல், நேரம் கடந்து உணவை உட்கொள்ளுதல், தூக்கத்தை புறக்கணித்தல், பரோட்டா உள்ளிட்ட மைதா மாவால் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்வது உள்ளிட்ட விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதேபோல், மலச்சிக்கல் பிரச்சினைக்கு வீட்டு வைத்தியங்களை எடுத்துக்கொள்வது அவரவர் விருப்பம் என்றாலும், ஆரம்ப கட்டத்திலேயே மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது.