செட்டிநாடு ஸ்பெஷல்.! பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?
பால் கொழுக்கட்டை -பால் கொழுக்கட்டை சுவையாகவும் கரையாமலும் வர எப்படி செய்வது என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- பால் =300 ml
- அரிசி மாவு =1 கப்
- வெல்லம் =முக்கால் கப்
- ஏலக்காய் =3
- தேங்காய் பால் =அரை கப்
- உப்பு =1 சிட்டிகை
- நெய் =1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மாவை சுடு தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி உப்பு மற்றும் நெய் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து கிளறி விடவும் ,சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். சுடு தண்ணீர் ஊற்றி பிசையும் போது மாவு கரையாமல் இருக்கும்.
பிறகு மாவை உங்களுக்கு பிடித்த வடிவங்களில் உருட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். கொதித்தவுடன் உருட்டிய மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து விடவும்.
உடனே கலந்து விடாமல் இரண்டு நிமிடம் வெந்த பிறகு கிளறிவிடவும் . பிறகு அதிலே கெட்டியான பாலை சேர்க்கவும். பால் பொங்கி வந்தால் அதை கரண்டியால் அடிக்கடி கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
பாலிலேயே கொழுக்கட்டைகளை நன்றாக வேக வைக்க வேண்டும் .பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்திற்கு வர தொடங்கிவிடும் .இந்த நிலையில் ஏலக்காய் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
கொழுக்கட்டை மிதமான சூட்டிற்கு வந்த பிறகு வெல்லம் சேர்த்து கலந்து சிறிது நேரத்தில் தேங்காய் பாலையும் சேர்த்து கலந்துவிட்டால் தித்திப்பான பால் கொழுக்கட்டை தயாராகிவிடும்.