Carrot : இல்லத்தரசிகளே..! இனிமேல் வாடிப்போன கேரட்டை தூக்கி எறியாதீங்க..! இதோ சூப்பர் டிப்ஸ்..!
பொதுவாக நமது வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ சமையலுக்காக காய்கறிகளை வாங்கி வைப்பதுண்டு. நாம் வாங்குகிற எல்லா காய்கறிகளையும் நாம் சமைப்பதில்லை. சில சமயங்களில் சமைக்காமல் அப்படியே போட்டு விடுகிறோம். இதனால் அந்த காய்கறிகளை சில நாட்களுக்கு பின்பு குப்பையில் தூக்கி எறிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். தற்போது இந்த பதிவில் நமது வீடுகளில் வாடிப்போன அல்லது காய்ந்த கேரட் இருந்தால் அதனை தூக்கி எறியாமல் உபயோகமான முறையில் சமையலுக்கு பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி பார்ப்போம்.
கேரட்டில் வைட்டமின் கே, ஃபோலேட், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. தற்போது இந்த பதிவில், வாடிப்போன கேரட்டை வைத்து அசத்தலான துவையல் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- உளுந்து – ஒரு கைபிடி
- பூண்டு பல் – 20
- பச்சைமிளகாய் – 3
- துருவிய கேரட் – 2
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- இஞ்சி – சிறிய துண்டு
- பெரிய வெங்காயம் – 2
- காய்ந்த மிளகாய் – 5
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- கடுகு சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- பெருங்காய தூள் – சிறிதளவு
கேரட் துவையல் செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதனுள் உளுத்தம் பருப்பு, பூண்டு பல், பச்சை மிளகாய், துருவிய கேரட், கொத்தமல்லி, இஞ்சி, பெரிய வெங்காயம், பெருங்காயத்தூள், சிறிதளவு உப்பு ஆகிவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : Onion Rice : வெங்காயம் மட்டும் போதுங்க..! சூப்பர் ரெசிபி ரெடி..!
வதங்கிய பின்பு அதனை எடுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைக்க வேண்டும். ஆறிய பின் அதனை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வேறொரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் இவற்றை வதக்கி, அதனுள் மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள கலவையை இதனுடன் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான கேரட் துவையல் தயார்.
நாம் தினமும் தேங்காய் துவையல், தக்காளி துவையல் என்று ஒரே துவையலை சாப்பிடுவதைவிட இப்படி வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடும் போது அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதுடன், சுவையாகவும் இருக்கும்.