உடல் சூட்டை தணிக்க வீட்டிலேயே கம்மங்கூழ் செய்யலாமா?..
கம்மங்கூழ் -கம்மங்கூழை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் கம்மங்கூழும் ஒன்று. 15 வருடங்களுக்கு முன்பு அனைவரது வீடுகளிலுமே கம்பங்கூழ் தயாரித்து குடித்து வந்தோம்.
ஆனால் இன்று கிடைப்பதற்கு அரிதானதாகவும், தள்ளுவண்டி கடையிலும் வாங்கி சாப்பிடுகிறோம். கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை குறைக்கவும் ,உடல் எடை குறைக்கவும் கம்மங்கூழ் சிறந்த உணவாகும்.
மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கூழை மட்டுமே முழு நேர உணவாக கொடுத்து வந்தால் அதன் பாதிப்புகள் குறையும். இளநீருக்கு அடுத்தபடியாக உடல் சூட்டை தணிப்பதில் கம்மங்கூழ் முக்கியத்துவம் வாய்ந்தது.
தேவையான பொருட்கள்:
முழு கம்பு =அரை கப்
செய்முறை:
கம்பை நன்கு கலைந்து கழுவிக்கொள்ளவும், அதை ஒரு பத்து நிமிடங்கள் ஊற வைத்தால் பொய் பயிர்கள் மேலே வந்து விடும். அதை இருந்து விட்டு கம்பை மட்டும் மிக்ஸியில் குருணை குருணையாக அரைத்துக் கொள்ளவும். மாவு பதத்திற்கு போய் விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்திற்கு அதை மாற்றி 3 கப் தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு குக்கரில் கம்பு எடுத்து வைத்துள்ள கப்பில் எட்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு கல் உப்பு சேர்த்து தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்த உடன் ஊற வைத்துள்ள கம்பை சேர்த்து கலந்துவிட்டு மிதமான தீயில் விசில் போட்டு மூடி விடவும்.4 விசில் வந்த பிறகு விசில் அடங்கியதும் திறந்து பார்க்கவும் , தண்ணீர் பதத்திற்கு இருந்தால் ஐந்து நிமிடம் தீயில் வைத்து கிளறிவிட்டு கெட்டி பதத்திற்கு வர வைக்கவும்.
தண்ணீரை கையில் தொட்டி விட்டு பிறகு கம்பை தொட்டால் கையில் ஒட்டக்கூடாது ,இதுதான் கம்பு வெந்ததற்கான சரியான பதம். இதை அப்படியே ஆற வைத்துவிட்டு ஆரிய பின்பு, அதை உருண்டைகளாக வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி வைத்து விடவும்.
இப்போது கம்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து விடவும். காலையில் அந்தக் கம்பை மோர் அல்லது தயிர் சேர்த்து கரைத்து குடித்தால் நம் உடல் குளிர்ச்சியாகிவிடும்.
இப்படி காலையில் குடித்தால் அதன் புளிப்புத் தன்மை ஒரு சிலருக்கு சேராமல் தலைவலியை ஏற்படுத்தும், அதனால் அவர்கள் மட்டும் கம்பை செய்த உடனே சாப்பிட்டு விடவும்.