அசைவச் சுவையில் ஒரு சைவ சூப் செய்யலாமா?
பொதுவாக நாம் காய்கறி சூப், கீரை சூப், ஆட்டுக்கால் சூப் போன்றவைகளை செய்து ருசித்து இருப்போம் ஆனால் இன்று ஒரு கிழங்கை வைத்து அதே ஆட்டுக்கால் சுவையில் சூப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
முடவாட்டுக்கால் கிழங்கு:
இந்த முடவாட்டுக்கால் கிழங்கு ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலை பிரதேசங்களில் பாறைகளுக்கு இடையில் விளையக்கூடியது. மேலும் இது 15 டிகிரி குளிர்ச்சியில் தான் விளையும்.பார்ப்பதற்கு ஆட்டுக்கால் போல இருக்கும் .
தேவையான பொருட்கள்:
- முடவாட்டுக்கால் கிழங்கு =1 kg
- மிளகு =1 ஸ்பூன்
- சீரகம் 2 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =தேவையான அளவு
- உப்பு சிறிதளவு
- இஞ்சி =1/2 இன்ச்
- பூண்டு =2 பள்ளு
கிழங்கு பொடி செய்யும் முறை :
முடவாட்டுக்கால் கிழங்கை நன்கு காய வைத்து பவுடர் ஆக்கிக் கொள்ள வேண்டும், அரைக்கும் பொழுது ஒரு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம், மஞ்சள் தூள் தேவையான அளவு மற்றும் உப்பை வறுத்து சேர்த்து பொடி செய்து கொள்ளவும் .இவ்வாறு சேர்த்து நன்கு பவுடராக்கி ஒரு கண்ணாடி டப்பாவில் அடைத்து வைக்கவும் .நமக்கு தேவைப்படும்போது இதை பயன்படுத்தி சூப் செய்து குடிக்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீருக்கு ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளலாம்.
சூப் செய்முறை:
இரண்டு கிளாஸ் தண்ணிருக்கு இரண்டு ஸ்பூன் வீதம் சேர்த்து அதனுடன் இஞ்சி மற்றும் பூண்டையும் தட்டி சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி சூடாக மாலை வேளையில் குடித்து வந்தால் மூட்டு வலிக்கு சிறந்த மருந்தாக இருக்கும், மேலும் இரவில் நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். மூட்டுகளுக்கு தேவையான சுரப்பியை தூண்டச் செய்யும். சிறந்த வலி நிவாரணியாகவும், உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே எடுத்துக் கொள்ளலாம்.
நாம் மலை பிரதேசங்களுக்கு செல்லும்போது மலிவான விலையில் வாங்கி இதுபோல் பவுடர் ஆக்கி வைத்து குடித்து வரலாம்.