BabyFood : குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய சத்துக்கள் நிறைந்த சட்னி..! எப்படி செய்வது..?
நாம் அனைவருமே நமது வீடுகளில் இட்லி, தோசை என சாப்பிடும் போது விதவிதமாக சட்னி செய்து சாப்பிடுவதுண்டு. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என பல வகைகளில் சட்னி செய்வதுண்டு. ஆனால், நாம் செய்யக்கூடிய சட்னியை குழந்தைகளுக்கு கொடுக்க முடியாது. ஏனென்றால் அந்த சட்னிகள் காரமாக இருப்பதால், குழந்தைகளும் சாப்பிட மறுப்பார்கள்.
தற்போது இந்த பதிவில் குழந்தைகள் சாப்பிடும் வண்ணம், காரமில்லாத சுவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- பாதாம் – 5
- முந்திரி – 5
- தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
- பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
- கடுகு – சிறிதளவு
- மிளகு – 4
- உப்பு – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் பாதாம், முந்திரி ஆகியவற்றை இரண்டு துண்டுகளாக உடைத்து, பொட்டுக்கடலை ஆகிய மூன்றையும் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு மிக்ஸியில் தேங்காய் துருவலுடன் இந்த பாதாம், முந்திரி, பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து அதனுடன் நான்கு மிளகு சேர்த்து அரைக்க வேண்டும். சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் பின்பு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு மட்டும் போட்டு கடுகு பொரிந்த பின்பு, அந்த கலவையில் சேர்த்து கிளறிவிட வேண்டும். இப்போது குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சட்னி தயார்.
இந்த சட்னியை குழந்தைகளுக்கு தோசை, இட்லி, இடியாப்பம் என்று நாம் கொடுக்கக்கூடிய உணவுகளுடன் தொட்டுக் கொடுக்கலாம். காரமில்லாமல் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதோடு இது அவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.