தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்போ உஷாரா இருங்க..!
சென்னை :இரவு தூங்கி காலையில் எழும்போது தலையணையில் வெள்ளை கரை படிந்து ஆங்காங்கே இருக்கும் அனுபவம் பலருக்கும் இருக்கும் . 100 ல் 75 சதவிகிதம் நபர்களுக்கு தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருக்கும். இது சில சமயங்களில் பயணங்கள் மேற்கொள்ளும் போது தொந்தரவுகளை ஏற்படுத்தும்.
குழந்தையில் இருப்பது தவறில்லை ஆனால் பெரியவர்கள் ஆகியும் இவ்வாறு இருப்பதை எளிதில் கடந்து செல்லக்கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவர் தனக்கீர்த்தி இதைப் பற்றி கூறுகையில் பொதுவாக மனிதர்களின் உடலில் உமிழ்நீர் சுரப்பிகள் ஒன்றிலிருந்து இரண்டு லிட்டர் எச்சிலை சுரக்கும் .இது தூங்கும்போது வாய் திறந்திருக்கும் பச்சத்தில் எச்சில் வெளிவர காரணமாகிறது. தூக்கத்தில் எச்சில் வடிப்பதற்கு எட்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.
1.வயது;அதாவது குழந்தைகள் எச்சில் வடிப்பது பொதுவானது தான் அவர்களால் முகத்தசைகளை கட்டுக்குள் வைக்க முடியாது, அதனால் அவர்கள் தூங்கினாலும் விழித்திருந்தாலும் எச்சில் வடிந்து கொண்டிருக்கும். இது இரண்டு வயதுக்கு மேல் குறைய துவங்கி விடும்.
2.தூங்கும் நிலை ; முதுகை நேராக வைத்து மேலே பார்த்தவாறு தூங்கும் போது இவ்வாறு நிகழ வாய்ப்பில்லை ஆனால் ஒரு புறமாக படுக்கும் போது எச்சில் வாயின் ஒருபுறம் சேர்ந்துவிடும் இதனால் எச்சில் வடிய காரணம் ஆகிறது.
3.மன அழுத்தம்; மன அழுத்தம் இருந்தால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும்.
4. அஜீரணம்; அஜீரண பிரச்சனை இருந்தாலும் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இதனால் எச்சிலை விழுங்க முடியாத நிலை ஏற்படும்.
5.மூக்கடைப்பு ; சளி பிரச்சனையால் ஏற்படும் மூக்கடைப்பு இருப்பவர்களுக்கு வாய் வழியாகத்தான் மூச்சு விடும் நிலை இருக்கும். இந்த சமயத்தில் எச்சில் வடிய காரணமாய் இருக்கும் .
6.தொண்டை கோளாறு ; தொண்டையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் எச்சிலை விழுங்க முடியாது. இதனால் உடலானது வாய் வழியாக எச்சிலை வெளியேற்றும்.
7.மருந்துகள் ; தூக்கத்திற்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இதனால் தன்னை மறந்து ஆழ்ந்த நிலையில் தூங்கும் போது எச்சில் வடியும்.
8.நரம்பு கோளாறு ;நரம்பியல் கோளாறுகளான பக்கவாதம் ,பெருமூளை வாதம் போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதிக எச்சில் வடியும் பிரச்சனை ஏற்படும். மேலும் நாக்கின் நீளம் இயற்கையாகவே பெரிதாக இருப்பது ,பற்கள் வெளியே நோக்கி இருப்பது மற்றும் குறட்டை விடும் பழக்கம் இருப்பவர்களுக்கும் இந்த பழக்கம் இருக்கும்.
தூக்கத்தில் எச்சில் வடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் தூங்கும் போது நேராக படித்து தூங்க வேண்டும். வாய் அல்லது உடலில் உள்ள பிரச்சனையின் வெளிப்பாடு தான் எச்சில் வடிக்கும் நிலை .அதனால் உங்களுக்கு எந்த காரணத்தால் ஏற்பட்டுள்ளது என கண்டறிந்து மருத்துவரை அணுகி தீர்வை பெற வேண்டும் என டாக்டர் தன கீர்த்தி கூறுகின்றார்.