கற்பூரவள்ளி மூலிகையில் இவ்வளவு பயன்களா? இருமல், சளி, ஆஸ்துமாவுக்கு சிறந்த நிவாரணம்…

ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

karpooravalli (1) (1) (1)

ஓமவல்லி (எ) கற்பூரவள்ளி என பெயர்களைக் கொண்ட இந்த மூலிகையை வைத்து வறட்டு இருமல், நெஞ்சு சளி, ஆஸ்துமா ஆகியவற்றை குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

சென்னை : சுவாச மண்டல பிரச்சனையை போக்கும் கற்பூரவள்ளி இலையின் மருத்துவ குணங்களைப் பற்றி ஆயுர்வேத மருத்துவர் மைதிலி தனது வலைதள பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

கற்பூரவள்ளி இலைகள் சிறந்த வீட்டு வைத்திய மூலிகையாக உள்ளது. இது இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படும் சிறந்த கிருமி நாசினி மூலிகையாக உள்ளது. கற்பூரவள்ளி ரசம், துவையல், சட்னி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியுள்ள சளியை வெளியேற்றுகிறது. இதில் உள்ள தைமோல் , கார்போகுரோல் போன்ற வேதி பொருட்களே இதற்கு காரணம் என்கிறார் டாக்டர் மைதிலி.

மேலும், இந்த வேதிப்பொருள்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி காய்ச்சல், சளி போன்றவற்றை தடுக்கிறது. நெஞ்சு சளியை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. கற்பூரவள்ளி கசாயமாக வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும் போது நெஞ்சு சளி வெளியேறிவிடுகிறது என ஆயுர்வேத மருத்துவர் மைதிலி கூறியுள்ளார்.

கற்பூரவள்ளி கசாயம் :

கற்பூரவள்ளி இலை ஐந்து எடுத்து உரலில் நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுத்தூள், கால் ஸ்பூன் சுக்கு பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். ஒரு டம்ளர் தண்ணீர் பாதி அளவு வந்த பிறகு அதில் 20 மில்லி அளவு தினமும் காலை வெறும் வயிற்றிலும், இரவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும் எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் சாப்பிட வேண்டும் என மருத்துவர் மைதிலி கூறினார்.

வறட்டு இருமல் :

கற்பூரவள்ளி இலையை அரைத்து சாறு எடுத்து 15 மில்லி தேனில் கலந்து காலை உணவிற்கு அரை மணி நேரம் முன்பும் இரவு உணவிற்கு அரை மணி நேரம் முன்பும் மூன்று நாட்கள் எடுத்து வரும் பொழுது வறட்டு இருமல் குணமாகிவிடும் என ஆயுர்வேத மருத்துவர் மைதிலி கூறினார்.

சைனஸ் தொந்தரவு :

சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு அதிக தலைவலி, மூக்கடைப்பு அடிக்கடி ஏற்படும். இதற்கு கற்பூரவள்ளி இலைச்சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெயும் சேர்த்து காய்ச்சி வெதுவெதுப்பான சூட்டில் வந்த பின் தலையில் வலி ஏற்படும் இடத்தில் மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால் சைனஸ் தொந்தரவு குறையும் என்கிறார் ஆயுர்வேத டாக்டர் மைதிலி.

ஆஸ்துமா :

கற்பூரவள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்தபின் அதில் நீராவி பிடித்து வரவேண்டும். வாரம் ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் ஆஸ்துமா குறைந்து விடும்.

கற்பூரவள்ளி ரசம் :

கற்பூரவள்ளியை ரசமாக செய்து வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளும் போது அதில் உள்ள பிரீ பையோட்டிக் குடல் பகுதியில் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ளும். மலச்சிக்கலை போக்குகிறது. மேலும், நுரையீரல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கிறது என ஆயுர்வேத மருத்துவர் மைதிலி கூறுகின்றார்.

பல் தொந்தரவுகள் :

பல்வலி, பல் சொத்தை, ஈறு வீக்கம், ஈறுகளில் ரத்த கசிவு உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலைகளை கொதிக்க வைத்து அதில் தொடர்ந்து 30 நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால், இவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும், மலேரியா தொற்று ஏற்படுவதை தடுக்கும் தன்மையும் இந்த மூலிகைக்கு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த இலையின் சாறுகளை சருமத்தில் தேய்த்துக் கொண்டால் கொசு கடிக்காது எனவும் கூறுகின்றார். மேலும், இந்த இலையை வாரம் ஒரு முறையாவது புகைப்பிடிப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது நுரையீரலில் உள்ள கழிவுகளை அகற்றும் தன்மை கொண்டுள்ளது என அறிவுறுத்துகிறார் ஆயுர்வேத மருத்துவர் மைதிலி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்