வறண்ட சருமத்தை தவிர்க்கும் அசத்தலான வீட்டுக் குறிப்புகள்…
வறண்ட சருமம் ஏற்பட காரணம் என்னவென்றும், அதனை தீர்க்க உதவும் வீட்டுக்குறிப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
வறண்ட சருமம் ஏற்பட காரணம் என்னவென்றும், அதனை தீர்க்க உதவும் வீட்டுக்குறிப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : பனிக்காலம் வந்து விட்டாலே பலருக்கும் சரும வறட்சி ஏற்பட்டு சருமம் வறண்டு காட்சியளிக்கும். இதனால், தோல் அரிப்பும் சில சமயம் ஏற்படும். உடலில் ஈரத்தன்மை குறையும்போது தோல்களில் வறட்சி ஏற்படுகிறது. இதுவே வறண்ட சருமம் என்கிறோம்.
காரணங்கள் :
அதிக சூடான தண்ணீரில் குளிப்பதாலும், ஏசி அறையில் அதிக நேரம் இருப்பது மற்றும் தண்ணீர் மிகக் குறைவாக எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் சரும வறட்சி ஏற்படுகிறது என தோல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வீட்டு குறிப்புகள் :
விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில் ஆகியவற்றை சம அளவு எடுத்து நன்கு கலந்து கொள்ளவும் .இவற்றை தேவையான அளவு எடுத்து வறட்சி உள்ள இடத்தில் தேய்த்து ஒரு நிமிடம் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து கழுவ வேண்டும் அல்லது இரவில் இந்த முறையை செய்து காலையில் முகத்தை கழுவிக் கொள்ளலாம். இதுபோல் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து கொள்ளலாம்.
இந்த ஆயிலை தலைமுடிக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் பொடுகு நீங்கி விடுவதோடு கூந்தல் வளர்ச்சியும் ஏற்படும். இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் செய்து குளித்து வரலாம். இந்த எண்ணெய்களில் அதிக அளவு விட்டமின் இ சத்து உள்ளது. இது தோலில் ஏற்படும் வறட்சி மற்றும் பூஞ்சை காளான் தொற்றை தடுக்கிறது.
அரிசி சிறிதளவு எடுத்து அதை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு அந்த தண்ணீரை மட்டும் எடுத்து, அதில் சிறிதளவு கற்றாழை ஜெல்லை கலந்து ஃப்ரீசரில் வைத்து கட்டி ஆக்கிக் கொள்ளவும். தேவைப்படும்போது அதிலிருந்து எடுத்து முகத்தை மசாஜ் செய்து முகத்தை துடைத்து விட வேண்டும்.
முருங்கை இலையை பொடி செய்து தேவையான அளவு, பச்சைப்பால் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை பேஸ்ட் ஆக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து பிறகு முகத்தை கழுவி விட வேண்டும். அதன் பிறகு தேங்காய் எண்ணெய் இரண்டு சொட்டு எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். இந்த முறைகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால் தோல் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படும்.