கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த தினம் இன்று!
காமராசர் 1903-ம் ஆண்டு, ஜூலை 15-ம் தேதி விருதுநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார். இவர் சத்ரிய வித்யா சாலா என்ற பள்ளியில் தனது படிப்பை தொடங்கினார். இவர் படிக்கும் போதே பொறுமையுடனும், விட்டுக் கொடுக்கும் மனதுடனும் விளங்கினார்.
இவர் தனது பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலையில், தனது மாமாவின் துணிக்கடையில் வேலை செய்தார். அப்போது இவர் அரசியல் தலைவர்களின் பேச்சால் இழுக்கப்பட்டு, சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு, அரசியலில் மிக தீவிரமாக களமிறங்கினார். பின் இவர் தனது 16-வது வயதில் காங்கிரசில் இணைந்தார்.
இவர் பல போராட்டங்களில் ஈடுபட்டு, பல தடவை சிறை சென்றுள்ளார். பல போராட்டங்களுக்கு பின் தடைகளை தாண்டி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற காலகட்டத்தில், மக்களின் வாழ்க்கை, கல்வி மற்றும் தொழில் வளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பல திட்டங்களை நிறைவேற்றினார்.
உணவு கிடைக்காமல் பள்ளிக்கு செல்லாமல் இடைநிறுத்தம் செய்யும் பிள்ளைகளின் வாழ்க்கையில், கல்விக்கண் திறந்த மிகப் பெரிய தலைவர் தான் இவர். அன்று முதல் இன்று வரை மாணவர்களின் பசியை போக்கும் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியவரும் இவர் தான்.
பல துறைகளில் முன்னேற்றத்தையும், மாணவர்களின் வாழ்க்கையில் கல்விக் கண்ணை திறந்த படிக்காத மேதை காமராசர் அவர்கள், 1975-ம் ஆண்டு அக்டொபர் இரண்டாம் நாள் இறைவனடி சேர்ந்தார். இறக்கும் வரையில் வங்கிகளில் எந்த கணக்கோ, சொந்த வீடோ, இலலாமல், கடைசி வரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்த தலைவர், என பெருமை காமராசரை மட்டுமே சேரும்.