சென்னையில் களமிறங்கும் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள்.! முதற்கட்டமாக 70 ரயில்கள் வாங்க முடிவு.!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டத்தில் 70 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன. 

சென்னையில் ஏற்கனவே, முதல்கட்டமாக மெட்ரோ ரயில் சேவையானது, கோயம்பேடு முதல் பரங்கிமலை வரையிலும், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும் இரு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் சென்னையில் மெட்ரோவின் பயன்பாடு அதிகரித்து வருவதால் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை துவக்கி வைத்தார்.  இரண்டாம் கட்ட மெட்ரோ பாதையானது மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும் ,  மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும், பூந்தமல்லி முதல் விவேகானந்தர் இல்லம் என மூன்று வழித்தடங்களில் மொத்தம் 118 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ பணியில் ஓட்டுநர் இல்லா ரயில்களை இயக்க முடிவு செய்து அதற்கான வேளைகளில் தற்போது மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதலில் 138 ஓட்டுநர் இல்லா ரயில்கள் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது 70 ரயில்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு மொத்தமாக ரூ.61,843 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வரும் 2026ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கபட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.