IPL2024: சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் நட்சத்திர வீரர் இவர்தான்.! வெளியான தகவல்..

IPL2024: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், 20 ஓவர்கள் கொண்ட டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17 ஆவது சீசன் ஆனது அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 19ம் தேதி, துபாயில் நடைபெற உள்ளது.

இந்த ஏலம் தொடங்குவதற்குள் பத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தங்கள் அணியில் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த பட்டியலை சமர்பிப்பதற்கு நவம்பர் 26-ம் தேதி வரை அவகாசம் உள்ளதாகவும், அதற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஐபிஎல் அமைப்புத் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, டிசம்பர் முதல் வாரத்தில் ஏலத்திற்கு வீரர்கள் குழு தயாராகி விடும். இந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பென் ஸ்டோக்ஸ் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவரை கடந்த 16 வது ஐபிஎல் சீசனில், சென்னை அணி ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் 2023 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கேக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஏனெனில் மூன்றாவது ஆட்டத்தில் அவரது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

முழங்காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக இரண்டு ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய அவர், மீதமுள்ள போட்டிகளில் விளையாட முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மட்டுமே செய்தார். ஒரு போட்டியில் கூட பந்து வீசவில்லை.

ஆல்ரவுண்டரான ஸ்டோக்ஸ் காயத்திற்கு அறிவை சிகிச்சை செய்ய உள்ளதால், அடுத்த 2 அல்லது 3 மாதங்கள் விளையாட முடியாது. எனவே அவரால் 2024 ஐபிஎல் சீசனிலும் விளையாட முடியாத சூழல் உள்ளது. இதனால் சென்னை அணி நிர்வாகம் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த தகவலின் படி, பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டால் சென்னை அணியிடம் ரூ.16.25 கோடி இருக்கும். அந்தத் தொகையை வைத்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அஸ்மத்துல்லா ஓமர்சாய் போன்ற வேறு சில வீரர்களை வாங்க முடியும். வரவிருக்கும் ஏலத்தின் போது ஒவ்வொரு அணியும் ரூ.100 கோடியை வைத்திருக்கும்.

இது கடந்த ஆண்டை விட ரூ.5 கோடி அதிகம். மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்திற்கு முன்னதாக, நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசனை தங்கள் அணியில் இருந்து விடுவிக்க வாய்ப்புள்ளது என்பதும், ஏலத்திற்கு முன்னதாக ரொமாரியோ ஷெப்பர்ட்-யை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.50 லட்சத்துக்கு வாங்கி அணியில் சேர்த்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.