15 டிகிரி எல்போ விதி; ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்? – சக்லைன் முஷ்டாக் கேள்வி..!

15 டிகிரி  எல்போ (முழங்கை) விதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்,ஐ.சி.சி நிபுணர்கள் இந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார்கள்?  என்று சக்லைன் கேள்வி எழுப்பியுள்ளார்.

லாகூரில் உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பயிற்சியாளராகவும்,பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான சக்லைன் முஷ்டாக்,சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பந்து வீச்சாளர்களுக்கான, தற்போதுள்ள 15 டிகிரி கை / முழங்கை நீட்டிப்பு விதியை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் கூறுகையில்:

“இந்த விதியானது பவுலர்கள் ஆஃப்-ஸ்பின் பந்துவீச்சை வீச நம்பிக்கையை இழக்க வைக்கிறது.அதாவது,பந்து வீச்சாளர்கள் 15 டிகிரி கோணத்தில் மட்டுமே பந்து வீச அனுமதிக்கும் இந்த முடிவுக்கு ஐ.சி.சி வல்லுநர்கள் எவ்வாறு வந்தார்கள் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.ஆசிய வீரர்கள், கரீபியன் வீரர்கள் என எல்லோரும் வித்தியாசமாக இருக்கும் நிலையில்,அவர்கள் குறித்து ஐ.சி.சி வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்தார்களா?.

ஏனெனில்,ஆசிய வீரர்களின் உடல்கள் வேறுபட்டவை,அவர்களின் கைகள் அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கின்றன.ஆனால்,கரீபியன் அல்லது மற்ற நாட்டு வீரர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் வேறுபட்டவை.

இதனால்,15 டிகிரி கோணம் என்பது மிகக் குறைவு.எனவே,ஐ.சி.சி இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

“இந்த விதிகளின் படி ஒருவர் ஆஃப்-பிரேக்ஸ், தூஸ்ரா மற்றும் டாப் ஸ்பின் பந்துவீச முடியும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். ஆனால், ஆஃப்-ஸ்பின் பந்துவீசும் வீரர்கள் தற்போது லெக் ஸ்பின்னர்கள் அல்லது ரிஸ்ட் (wrist) ஸ்பின்னர்களாக மாறுவதை நான் கண்டுள்ளேன்.

நல்ல திறமை இருந்தால் ஒரு ஆஃப்-ஸ்பின்னர் வெள்ளை பந்து முறையிலும் வெற்றிபெற முடியும் .எனவே,திறம்பட செயல்பட தூஸ்ராவை வீசுவது அவசியமில்லை”,என்று தெரிவித்தார்.

விதிகள்:

பல வருடங்களுக்கு முன்பு இருந்தது போல் அல்லாமல் தற்போது கிரிக்கெட்டில் விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.அதன்படி,தூஸ்ரா வகை பந்து வீச்சுக்கும் கூட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதில் சில விதிமுறைகள் உள்ளன.ஒரு பவுலர் பந்து வீசும் போது முழங்கையை 15 டிகிரிக்கு மேல் வளைத்து பந்து வீச கூடாது என்ற விதி ஐ.சி.சி.யால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.எனவே,பவுலர்கள் அதற்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டு பந்து வீச வேண்டும்.

இந்தியா vs பாகிஸ்தான்:

மேலும்,இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வித்தியாசத்தை விளக்கி சக்லைன் கூறியதாவது:”இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு அடிக்கடி சுற்றுப்பயணங்கள் மேற்கொள்வதால் இந்தியா பயனடைகிறது. மேலும், தனது 19 வயதிற்குட்பட்ட மற்றும் அணிகளுடன் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொள்வதன் மூலம் சரியானதைச் செய்துள்ளது. ஆனால்,அதேசமயம் உள்நாட்டில் போதுமான கிரிக்கெட் போட்டி மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நான் இங்கிலாந்தில் நான்கு சம்மர் போட்டிகள் மற்றும் ஒரு முறை ஆஸ்திரேலியா போட்டிகளில் பங்கேற்றுள்ளேன்.அப்போது ஒவ்வொரு வருடமும் இந்திய அணி அந்த நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை நான் கண்டேன்.

இந்தியா vs இலங்கை:

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணியினர் தற்போது 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர்.

மறுபுறம், பாகிஸ்தான் மூன்றாவது டி 20 போட்டியில் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது.

சுழற்பந்து வீச்சாளர்கள்:

மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்துவதற்கான போக்கு அதிகரித்து வருவதால் அணிகள் வெள்ளை பந்து ஆட்டங்களில் சிறப்பு ஆஃப்-பிரேக் பந்து வீச்சாளர்களை நம்பவில்லை.

சஹால் மற்றும் யாதவ் போன்ற மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களை இந்திய அணிகள் பெரிதும் விரும்புகின்றன.

அதேபோல,ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜாம்பா மற்றும் ஸ்டீபன்சன் உள்ளனர்.இங்கிலாந்தில் ஆதில் ரஷீத் போன்றவர்கள் உள்ளனர் .

சில நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே முக்கியமாக ஸ்பெஷலிஸ்ட் ஆஃப் ஸ்பின்னர்களை வெற்றிகரமாகப் பயன்படுத்துகின்றன.

அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு நாதன் லியோன்,இந்தியாவுக்கு ஆர் அஸ்வின் உள்ளனர்.அதே நேரத்தில்,இங்கிலாந்துக்காக மொயீன் அலி உள்ளார்.

மேலும்,உள்நாட்டு மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளில் நிரந்தர சுழல் பயிற்சியாளர்களைக் அணிகள் கொண்டிருப்பது அவசியம்”,என்று தெரிவித்தார்.

சக்லைன் முஷ்டாக்:

சக்லைன் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆவார்.இவர் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்.

1995 மற்றும் 2004 க்கு இடையில் பாகிஸ்தானுக்காக 49 டெஸ்ட் போட்டிகளையும், 169 ஒருநாள் போட்டிகளையும்  சக்லைன் விளையாடியுள்ளார்.இவர்,ஒருநாள் போட்டிகளில் குறுகிய காலத்தில் 200 மற்றும் 250 விக்கெட்டுகளின் மைல்கற்களை எட்டியவர்.

மேலும்,டெஸ்ட் போட்டிகளில் 208 மற்றும் ஒருநாள் போட்டிகளில் 288  விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.இதையடுத்து,2016 வரை, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகமான பந்து வீச்சாளராக சக்லைன் உள்ளார்.

மேலும்,2016 ஆம் ஆண்டு அன்று, பாகிஸ்தானுக்கு எதிரான ஹோம் தொடரில் இங்கிலாந்தின் சுழற்பந்து ஆலோசகராக சக்லைன் முஷ்டாக் ஈ.சி.பியால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.