உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள்…!!

Default Image

உலக வரலாற்றில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆண்டவர்கள் மொங்கோலியர்கள் தான். அது பற்றிய எதிர்மறையான தகவல்களே வரலாற்று நூல்களில் பதிவுசெய்யப் பட்டுள்ளன. இருப்பினும், மொங்கோலிய சாம்ராஜ்யத்தில் இருந்த சமூக, பொருளாதார, தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஐரோப்பாவுக்கு வருவதற்கு நீண்ட காலம் எடுத்தன.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், உலகில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆள்வது இலகுவான காரியம் அல்ல. அதை நடைமுறைப் படுத்துவதற்காக தபால் சேவை கொண்டுவரப் பட்டது. மேற்கே கருங்கடலில் இருந்து கிழக்கே பசுபிக் சமுத்திரம் வரையில், தபால் சேவை சிறப்பாக இயங்கியது.

சாம்ராஜ்யத்திற்குள் இருந்த மாகாணங்களில் இருந்து செல்லும் அனைத்துப் பாதைகளும், (சீனாவில் இருந்த) தலைநகர் கான்பாலிக்கை வந்தடைந்தன. 40 அல்லது 70 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு தபால் நிலையம் இருந்தது.

அங்கிருந்து தபால் கொண்டு செல்வதற்கு 200 தொடக்கம் 400 வரையிலான குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. சராசரியாக ஒரு கடிதம், ஒரு நாளைக்கு நானூறு கிலோமீட்டர் பயணம் செய்திருக்கும். ஐரோப்பாவில், 19ம் நூற்றாண்டில் தான் இது போன்று ரயில் வண்டி மூலம் கொண்டு செல்லும் தபால் சேவை அறிமுகப் படுத்தப் பட்டது.

மேலும் கான் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்யம் அனைத்து மக்களுக்குமான நலன்புரி அரசாங்கமாகவும் இயங்கியது. களஞ்சிய அறைகளில் எந்நேரமும் தானியங்கள் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். விளைச்சல் குறைவான காலத்தில் மானிய அடிப்படையில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படும். அத்துடன் ஏழைகளுக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டது.

ஏழைகளுக்கு தேவையான உணவு மட்டுமல்லாது, உடைகளையும் அரசு கொடுத்தது. கோடை காலம், குளிர் காலத்திற்கு அவசியமான உடைகள் வழங்கப் பட்டன. இதற்காக ஆடை தயாரிப்பாளர்கள் ஒரு நாள் உழைப்பை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருந்தது. யார் யாருக்கு உடுபுடைவகள் வழங்க வேண்டும் என்ற விபரங்களை அரசு அலுவலர்கள் குறித்து வைத்திருந்தனர். ஐரோப்பாவில், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தான், இது போன்ற நலன்புரி அரசு நடைமுறைக்கு வந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்