இன்று மாமனிதர் தியாகத் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் நினைவு தினமாகும்….!!
மார்ச் 19, 1998 – இன்று மாமனிதர் தியாகத் தலைவர் ஈ.எம்.எஸ் நம்பூதிரிபாட் நினைவு தினமாகும். சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் ஈ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மா மனிதர்.
ஈ எம்.எஸ்தான் விரும்பும் மாற்றத்தை தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் . . தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார்., இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். மூன்று முறை கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிச அரசின் முதலமைச்சராக பதவி வகித்த அவர் முதல்வர் பதவியிலிருந்து ஒய்வு பெற்று அரசு அளித்த வீட்டிலிருந்து வெளியேறும்போது ஒரு தகர பெட்டியையும் அதற்குள் சில துணிமணிகளையும் மட்டுமே எடுத்துச் சென்றார். ஏனெனில் எடுத்துச் செல்வதற்கு அதை விட வேறு “சொத்து ” அவரிடம் இருக்கவில்லை.
ஊழலும் யதேச்சதிகாரமும் அரசியல் யதார்த்தம் என்று ஆகிவிட்ட சூழலில் ஒரு மக்கள் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இன்னமும் உதாரணமாக இவரை மட்டுமே காட்ட வேண்டியிருக்கிறது.