தேசபிதா காந்தியின் பிறப்பும் , இறப்பும்..!!
“மகாத்மா காந்தி”என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். ‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்து உங்களிடம் சொல்கிறது தினசுச்வடு…
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.
ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் விடுதலை போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்து நமக்கு சுதந்திரத்தை வாங்கி தந்தவர் நம்முடைய மகாத்மா காந்தி அவர்கள்.
அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.காந்தி நம்மை விட்டு சென்றாலும் அவரின் தியாகம் நம்முடனே இருக்கும் நம்முடைய தேச தந்தையாக…
DINASUVADU