தந்தி சேவையை தமிழில் தந்த சிவலிங்கம் கதை…!!
2013ம் ஆண்டோடு நிறைவுற்ற தந்தி சேவையை தமிழில் தந்த சேவகன் சிவலிங்கம் இன்று (16.12.18) தன்வாழ்வை நிறைவு செய்துகொண்டார்.அவருடைய உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கபட்டன.
1994ம் ஆண்டு அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் தலைமையில் தொடங்கியது இந்திய மொழிகளில் தந்தி அனுப்பும் திட்டம். திருச்சியை சேர்ந்த திரு.சிவலிங்கம் அப்போதைய அஞ்சல் துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்ரமணியம் முன்னிலையில் தமிழ் தந்தியை வெற்றிகரமாக இயக்கி காட்டினார்.
அதே ஆண்டில் தமிழகத்தின் 25 தபால் நிலையங்களில் தொடங்கிய தமிழ்வழி தந்தி சேவை அமோக வரவேற்பு பெற்றது.
திராவிட இயக்கங்கள் பெருமளவில் தந்தியைப் பயன்படுத்தின. பிறந்தநாள் வாழ்த்துகள், பண்டிகை வாழ்த்துகள், சென்னை வாழ் தலைவருக்கு வெளியூர் தொண்டர்கள் அனுப்பும் செய்திகள் என நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் போகப்போக தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகமும் தந்தியின் தேவையைக் குறைத்தன.
மேலும் தமிழில் தந்தி அனுப்புதலையும் பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை. 2005 ம் ஆண்டு வரை 25க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் தமிழ்த்தந்திக்கருவிகள் தூசி மண்டிக்கிடந்தன.
அவ்வாண்டின் அறிக்கையின்படி, வெறும் 5 தமிழ்தந்திகள் மட்டுமே அனுப்பப்பட்டன. இதையடுத்து 2013ம் ஆண்டு ஜூலை,14 அன்று தந்தி சேவை முற்றிலுமாக இந்தியாவில் நிறுத்தப்பட்டது. தகவல் தொழில்நுட்பத்தின் அசுரவளர்ச்சி அருமையான படைப்பொன்றை அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டது .
பெரும் உழைப்பைக்கொட்டி இவர் தந்த இந்த மொழிச்சேவையை பெறுவதில் தமிழுலகம் காட்டிய முனைப்பை அதன் பயன்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் காட்டவில்லை. இது நம் தவறுதான்.