டிசம்பர் 19 இன்றையதினம் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் தினம்…!
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் ஒரு நாள் கடக்கமுடியாது என்பது உண்மை. அதே நேரத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீய விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது.
பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் என விரிந்து கிடக்கிறது பிளாஸ்டிக் சந்தை. ஆனால் மனித பயன்பாட்டிற்கு பிறகு பிளாஸ்டிக் கழிவுகள் மக்குவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. இதனால் நமக்கென்ன ஆகப் போகிறது என்று கவலைப்படாமல் இருப்பவர்களுக்கு தற்போதே அதிர்ச்சி காத்திருக்கிறது. ஆம்! கடல் நீரில் உள்ள மீன்களை விட பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் வெளிவந்துள்ளன. இதனால் புவியின் ஒட்டுமொத்த சூழ்நிலை மண்டலமே மாற்றத்திற்கு உள்ளாகும் எனக் கூறப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க முயற்சி செய்வோம். அதற்கு முதலில் இயன்றளவு ஒவ்வொருவரும் தாமாகவே முன்வந்து பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்வதும், மறுசுழற்சிக்கு உட்படுத்துவதும், பிளாஸ்டிக் குப்பைகளைப் பகுப்பாய்ந்து பிரித்து அழிப்பதும் கடமையாக மேற்கொள்ள வேண்டும். பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் சுற்றுப்புறத்தோடு தொடர்பு கொண்டே படைக்கப்படுகின்றன. எனவே மானுட சிந்தனை மேலோங்க அனைத்து உயிரிங்களின் நேசமிகு மனிதர்களாக சூழலியல் பாதுகாப்பில் சிறிதளவேனும் அக்கறையோடு செயல்படுவோம்.